ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் பேட்டிங்கில் அனலை தெறிக்கவிட்ட புஜாரா – சதமடித்து வரலாற்று சாதனை, துள்ளிக்குதித்த மகள்

Cheteswar Pujara County Daughter
- Advertisement -

இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் முதல் கட்ட லீக் சுற்று போட்டிகளுக்கு பின் ஒருநாள் தொடரான ராயல் லண்டன் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அனுபவ வீரர் செடேஸ்வர் புஜாரா கவுண்டி தொடரில் சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசி இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டார். அந்த தொடரின் இறுதியில் சசக்ஸ் அணியின் கேப்டன் காயத்தால் விலகியதால் அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட புஜாரா இந்த ராயல் லண்டன் கோப்பை தொடரில் முழுமையாக கேப்டன்ஷிப் செய்து வருகிறார்.

அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள சசக்ஸ் அணிக்காக வார்விக்ஷைர் அணிக்கு எதிராக 311 ரன்களை சேசிங் செய்கையில் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக பேட்டிங் செய்த அவர் வெறும் 79 பந்துகளில் சதமடித்து 107 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினார். இருப்பினும் இதர பேட்ஸ்மென்கள் கைகொடுக்க தவறியதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சசக்ஸ் ஆகஸ்ட் 14ஆம் தேதியான நேற்று சர்ரே அணியை மற்றொரு லீக் போட்டியில் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் அணிக்கு ஹரிஷன் வார்ட் 5, அலி ஓர் 4 என தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

அனலாக புஜாரா:
அதனால் 9/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய புஜாரா மற்றொரு வீரர் டாம் கிளார்க் உடன் இணைந்து வழக்கம்போல நங்கூரமாக நின்று விக்கெட்டை விடாமல் பேட்டிங் செய்ய துவங்கினார். ஆனால் பொதுவாக பொறுமையாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் கடந்த போட்டியில் சதமடித்து நல்ல பார்மில் இருப்பதால் பெற்ற தன்னம்பிக்கையால் கடந்த போட்டியை விட இந்த போட்டியில் நிதானமாக விளையாடாமல் சரவெடியாக பேட்டிங் செய்தார்.

இந்த ஜோடியில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிளார்க் பொறுமையாக பேட்டிங் செய்ய மறுபுறம் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்ட புஜாரா 3வது விக்கெட்டுக்கு 205 ரன்கள் பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த தனது அணியை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார். 3வது ஓவரில் ஜோடி சேர்ந்து 36 ஓவர்கள் வரை எதிரணியை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் பொறுமையாக பேட்டிங் செய்த கிளார்க் 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 (106) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அவருடன் அதிரடியாக விளையாடிய புஜாரா சதமடிக்க எதிர்ப்புறம் வந்த டாம் அஸ்லோப் 22 (19) டெல்ராய் ராலின்ஸ் 15 (13) என முக்கிய மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் 20 பவுண்டரி 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அந்நியனாக பேட்டிங் செய்த புஜாரா சதமடித்து 174 (131) ரன்களை 132.82 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

வரலாற்று சாதனை:
அவரது அனல் பறந்த பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சசக்ஸ் 378/6 விளாசியது. அதனால் 379 என்ற கடினமான இலக்கை துரத்திய சர்ரே ஆரம்பம் முதலே சசக்ஸ் பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 31.4 ஓவரில் வெறும் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரியான் படேல் 65 (56) ரன்களும் டாம் லாஸ் 57* (60) ரன்கள் எடுத்த போதிலும் எஞ்சிய வீரர்கள் 20 ரன்களை கூடத் தாண்டாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. அதன் கரணமாக 216 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற சசக்ஸ் பங்கேற்ற 5 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து குரூப் ஏ புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

இப்போட்டியில் 174 ரன்களை 132 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய புஜாராவின் பேட்டிங்கை பார்த்து மீண்டும் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளார்கள். அதிலும் 174 ரன்களை குவித்த அவர் புகழ்பெற்ற சசக்ஸ் அணிக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த ராயல் லண்டன் கோப்பை தொடரில் 63 (71), 14* (7), 107 (79), 174 (131) என அதிரடியாக ரன்களை குவித்து வரும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி கொண்டுள்ள 4வது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மைக்கேல் பெவன் : 57.86
2. விராட் கோலி : 57.50
3. பாபர் அசாம் : 56.16
4. புஜாரா : 55.95*

இப்போட்டியை மைதானத்திலிருந்து நேரில் பார்த்த புஜாராவின் செல்ல மகள் தனது தந்தை முதல் முறையாக இப்படி அதிரடியாக விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement