97 ரன்களில் பண்ட் அவுட்டாக புஜாரா சொன்ன அந்த வார்த்தைகள் தான் காரணம் – சிட்னி நினைவை பகிரும் இந்திய கேப்டன்

Pant-2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணியாக சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் சாயப்பதெல்லாம் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகும். அதற்கு விதிவிலக்கல்லாத இந்தியாவும் 70 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் என எத்தனையோ ஜாம்பவான்களை கொண்டிருந்த போதிலும் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் வெறும் கையுடன் திரும்பி வந்தது.

IndvsAus-1

- Advertisement -

அதற்கு 2018/19இல் முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக சரித்திரம் படைத்தது. அதை தொடர்ந்து 2020/21இல் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்ததால் மீண்டும் அதே மேஜிக்கை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடிலெய்ட் நகரில் நடந்த முதல் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அவமானமான சாதனை படைத்த இந்தியாவுக்கு அடுத்த போட்டியிலேயே கேப்டன் விராட் கோலி குழந்தை பிறப்பு காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.

மாஸ் பண்ட்:
அதனால் 4 – 0 என இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியாவது உறுதி என்று அனைவரும் நினைத்த வேளையில் அற்புதமாக வழிநடத்திய அஜிங்க்ய ரஹானே மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு திரும்ப உதவினார். அதன்பின் சிட்னி நகரில் நடந்த 3-வது போட்டியை டிரா செய்த இந்தியாவுக்கு பிரிஸ்பேனில் நடந்த 4-வது போட்டிக்கு முன்பாக நிறைய முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகினார்கள்.

அதனால் ஆஸ்திரேலியா 32 வருடங்களாக தோல்வியடையாத காபா மைதானத்தில் நடந்த 4-வது போட்டியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற அறிமுக வீரர்களுடன் களமிறங்கினாலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா காபா கோட்டையைத் தகர்த்து வெற்றிக்கொடி நாட்டி 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது.

- Advertisement -

அந்த பரபரப்பான போட்டியில் 89* ரன்கள் விளாசிய ரிஷப் பண்ட் வரலாற்றின் ஒரு மிகச்சிறந்த இன்னிங்சை விளையாடி இந்தியாவுக்கு பினிஷிங் செய்து கொடுத்தார். விராட் கோலி இல்லாமல் முக்கிய வீரர்கள் காயமடைந்த போதிலும் 36 ஆல் அவுட்டுக்கு பின் கொதித்தெழுந்து பதிவு செய்த அந்த வெற்றி ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றியாக போற்றப்படுகிறது.

pant

கெடுத்த புஜாரா:
முன்னதாக அந்த தொடரில் சிட்னி நகரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 407 ரன்கள் இலக்கை 4-வது இன்னிங்சில் துரத்திய இந்தியாவுக்கு கில் 31, ரோஹித் சர்மா 77 என தொடக்க வீரர்கள் சிறப்பான ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் ரகானே 4 ரன்களில் ஏமாற்றினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா – பண்ட் ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதில் ஒரு கட்டத்தில் வெறித்தனமாக 12 பவுண்டரி 3 சிக்சரை பறக்கவிட்ட பண்ட் 97 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்காக போராடிய போது ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதன்பின் புஜாராவும் 77 ரன்களில் அவுட்டானதால் திடீரென தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை விஹாரி 23* (161) – அஷ்வின் 39* (128) சேர்ந்து போராடி டிரா செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் அந்த நாளில் 97 ரன்கள் எடுத்திருந்த போது பொறுமையாக விளையாடுமாறு புஜாரா கூறியதால் தான் பதற்றமடைந்து அவுட்டானதாக ரிஷப் பண்ட் தற்போது தெரிவித்துள்ளார்.

pant

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்தில் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப்.. நீண்ட நேரம் விளையாடுவதற்கு முயற்சி செய். நீ பவுண்டரி அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை சிங்கிள், டபுள் ரன்கள் கூட எடுக்கலாம் என்று புஜாரா என்னிடம் கூறினார். அதனால் சற்று பதற்றமடைந்து கோபமடைந்த நான் இரு மனநிலைக்கு சென்றேன். ஏனெனில் அதுவரை எந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அதனால் நாங்கள் நல்ல வேகத்தை உருவாக்கினோம். இருப்பினும் “அடடா, என்ன நடந்தது? அங்கு நான் சதமடித்திருந்தால் அது என்னுடைய சிறந்த இன்னிங்சாக இருந்திருக்கும்” என்று கூறினார்.

இது பற்றி அப்போட்டியின் கேப்டனாக இருந்த அஜிங்க்ய ரஹானே தெரிவித்தது பின்வருமாறு. “ரன்களை பொறுமையாக நாம் அடித்துக் கொள்ளலாம் என்று மறுபுறத்தில் புஜாரா அவரை (பண்ட்) மெதுவாக விளையாடுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி ஒரு அனுபவமான வீரர் “தற்போது பொறுமையாக இரு, 97 ரன்களை எடுத்துள்ள நீ நிதானத்துடன் விளையாடினால் 100 ரன்களை எட்டி விடலாம்” என்று கூறியதால் பொறுமையாக விளையாடிய பண்ட் இறுதியில் அவுட்டாகி விட்டார். அதனால் கடும் கோபத்துடன் பெவிலியனுக்கு வந்த அவர் “நான் 97 ரன்களில் இருக்கிறேன் என்று புஜாரா எனக்கு நினைவு படுத்தினார். ஆட்டத்தின் போக்கில் அதை மறந்த என்னிடம் அவர் எதையுமே சொல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் சதத்தை அடித்திருப்பேன்” என்று எங்களிடம் கூறினார்” என தெரிவித்தார்.

Advertisement