
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2023 வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 35 அரைசதம் என 7195 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை அவரது பேட்டிங் பார்ம் சரிவு காரணமாக ஓராண்டாகவே இந்திய அணி புறக்கணித்து வருகிறது.
அதோடு தற்போது 36 வயதாகும் அவர் இனி இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை என்பதனால் அவரை தவிர்த்து விட்டு இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டது. அந்த வகையில் தற்போது புஜாராவின் இடத்தில் மூன்றாவது வீரராக சுப்மன் கில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும் இனியும் அவரே தான் அந்த இடத்தில் தொடர்வார் என்று தெரிகிறது. இதன் காரணமாக புஜாராவின் டெஸ்ட் கிரிக்கெட் கரியர் முடிந்துவிட்டது என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. ஆனால் இன்றளவும் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வரும் புஜாரா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
இருந்தாலும் இந்திய அணியின் நிர்வாகம் இனியும் அவருக்கு வாய்ப்பு வழங்காது என்பது உறுதி. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி பேர்த் நகரில் துவங்க இருக்கும் வேளையில் அவர் இந்த தொடரின் ஹிந்தி வர்ணனையாளராக இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் முதல் முறையாக வர்ணனையாளராக செயல்பட இருக்கும் புஜாரா இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடிக்காத போது தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டு வந்திருந்த வேளையில் தற்போது அவரைப் போன்றே புஜாராவும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : நீங்க அங்கேயே இருங்க பி.சி.சி.ஐ போட்ட உத்தரவு.. இந்திய அணியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல் – என்ன காரணம்?
ரசிகர்கள் பலரும் அவர் இந்திய அணியில் இடம் பிடித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் அவரோ வாய்ப்பின்றி தற்போது வர்ணனையாளராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.