தோனியை அடுத்து அவரின் விக்கெட்டை எடுப்பதே லட்சியம் – ஐபிஎல் தொடருக்காக கனவுடன் காத்திருக்கும் சக்காரியா

Cheten Sakariya MS Dhoni
- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. வழக்கமாகவே ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த தொடரில் இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

ipl

- Advertisement -

இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வருட ஐபிஎல் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் வீரர்கள்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சியை மும்பையில் தொடங்கியுள்ளன. குறிப்பாக தற்போது நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தக்க வைப்பதற்காக இதர அணிகளை காட்டிலும் ஒரு வாரம் முன்னதாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் தனது வலைப்பயிற்சியை தொடங்கியது.

Ipl

ரசிகர்களை போலவே இந்த ஐபிஎல் தொடருக்காக அதில் பங்கேற்கும் வீரர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். குறிப்பாக இளம் வீரர்கள் இந்த தொடரில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் ஐபிஎல் போன்ற ஒரு மிகப்பெரிய தொடரில் இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டால் அதன் காரணமாக தங்களின் தாய்நாட்டுக்கு விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு தாமாகவே தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

- Advertisement -

தோனியின் விக்கெட் எடுத்த சேட்டன் சகாரியா:
அந்த வகையில் கடந்த வருடம் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சேட்டன் சக்காரியா அதில் அபாரமாக செயல்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதம் ஷிகர் தவான் தலைமையில் இலங்கையில் விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் அறிமுகமாக விளையாடும் பொன்னான வாய்ப்பையும் பெற்றார். ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் வரும் காலங்களில் இந்திய அணியில் முதன்மை பந்துவீச்சாளராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

sakariya 2

கடந்த வருடம் 14 விக்கெட்டுகளை எடுத்து அபாரமாக செயல்பட்ட அவரை இந்த வருடம் 4.2 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு டெல்லி கேபிடல்ஸ் வாங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் விக்கெட்டை எடுத்தது மறக்க முடியாதது என சேட்டன் சக்காரியா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் விக்கெட்டை எடுத்தது ஐபிஎல் 2021 தொடரில் எனக்கு அமைந்த மறக்க முடியாத தருணமாகும். அதே போல் எனது அறிமுக போட்டி மறக்க முடியாதது என்றாலும் அவரின் விக்கெட்டை எடுத்ததுதான் அதைவிட சிறந்ததாகும். ஏனெனில் கிரிக்கெட்டின் லெஜெண்ட்டாக இருக்கும் அவரைப் போன்ற ஒருவரை அவுட் செய்வது உண்மையாகவே சிறந்த தருணமாகும்” என கூறினார்.

அடுத்த டார்கெட் விராட் கோலி:
எம்எஸ் தோனி விக்கெட் உட்பட கடந்த வருடம் அபாரமாக செயல்பட்டதன் காரணமாக இந்திய அணியில் விளையாடிய அவர் இந்த வருடம் மற்றொரு நட்சத்திரம் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏபி டிவில்லியர்ஸ்க்கு எதிராக வலைப்பயிற்சியிலும் போட்டியிலும் பந்து வீசியுள்ளேன். அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் சவாலானது. ஏனெனில் அவர் கடைசி கட்ட ஓவர்களில் கூட அனைத்து விதமான ஷாட்களை அடிக்கக்கூடியவர். மேலும் தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டதால் அவரின் விக்கெட்டை என்னால் எடுக்க முடியாது. எனவே ஐபிஎல் 2022 தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க விரும்புகிறேன்” என கூறினார்.

abd 1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த வருடம் ஓய்வு பெற்றார். எனவே அவரின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனாலும் அதே அணியில் விளையாடி வரும் மற்றொரு இந்திய ஜாம்பவான் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதே இந்த வருட ஐபிஎல் தொடரில் தனது லட்சியம் என சேட்டேன் சக்காரியா கூறியுள்ளார்.

Advertisement