ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 – 19, 2020 – 21 ஆகிய அடுத்தடுத்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
அந்தத் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்று ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் வெல்வதற்கு இந்திய பவுலர்கள் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா:
மேலும் கடந்த 2 தொடர்களில் தோல்விகளை சந்தித்ததால் இம்முறை இந்திய அணியை ஆஸ்திரேலியர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் கடினமான சவாலை கொடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதையும் தாண்டி இந்தியா வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2020 – 21 தொடரை வென்ற இந்திய அணியை தேர்ந்தெடுத்த சேட்டன் சர்மா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் என்ன நடக்கும் நாம் எப்படி விளையாடுவோம் என்று நினைத்த காலங்கள் இருந்தன. இருப்பினும் கடந்த 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவை நாம் தோற்கடித்தோம். இதற்கு முன் ஆஸ்திரேலியா நம்மை எளிதாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது அவர்கள் இந்தியாவை தோற்கடிக்க முழு திறமையுடன் விளையாட வேண்டும் என்பதை அறிவார்கள்”
இந்தியா வெல்லும்:
“அந்தப் பெயரை நாம் உருவாக்கியுள்ளோம். தற்போது நாம் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறோம். எனவே ஆஸ்திரேலியாவுக்கு நாம் சவாலை மட்டும் கொடுக்க போவதில்லை. அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம். நம் வீரர்கள் மீது எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. பவுலர்கள் தான் டெஸ்ட் போட்டியை வென்று கொடுப்பார்கள் என்பதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்”
இதையும் படிங்க: வேலியில் உழைச்சுருக்கேன்.. அவங்களுக்கு எதிராக புதிய பதிலடி ஆட்டத்தை பார்ப்பீங்க.. சுப்மன் கில் பேட்டி
“தற்சமயத்தில் இந்தியா உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது. நம்மிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் 250 – 260 ரன்களில் பல அணிகள் அவுட்டாகின்றன. எனவே அதை கட்டுப்படுத்த நம்மிடம் பவுலிங் அட்டாக் இருக்கிறதா? என்பது கேள்வியாகும். சமீப காலங்களில் நாம் எதிரணிகளை 150க்கு கூட அவுட்டாக்கியுள்ளோம். எனவே நமது பவுலர்கள் தான் துருப்புச்சீட்டு” என்று கூறினார்.



