சென்னை எனது இன்னொரு வீடு, ஸ்கூல் கிரிக்கெட் ரொம்ப முக்கியம் – தமிழக மண்ணில் தோனி நெகிழ்ச்சி பேச்சு

MS Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவிற்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே மகத்தான கேப்டன் ஆவார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டபோது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி என உள்ளூர் நட்சத்திரங்கள் கேப்டனாக களமிறங்கினார்கள். ஆனால் சென்னையில் அதுபோன்ற நட்சத்திர அந்தஸ்துடைய வீரர்கள் அந்த சமயத்தில் இல்லாத காரணத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தோனியை 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார் என்ற காரணத்துக்காக சென்னை அணி நிர்வாகம் பெரிய தொகைக்கு வாங்கிய கேப்டனாக நியமித்தது.

அப்போது முதல் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து அபாரமாக வழிநடத்திய அவர் சச்சின், கங்குலி போன்றவர்களையும் மிஞ்சி அடுத்தடுத்த கோப்பைகளை வென்று ஐபிஎல் தொடரிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தார். அவரின் அதிரடியான பினிஷிங், அடுத்தடுத்த வெற்றிகளால் ஈர்க்கப்பட்ட தமிழக மக்களும் ரசிகர்களும் அவரை “தல” என்று மனதில் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

திருவள்ளூரில் தோனி:
அந்த அளவுக்கு தன் மீது பாசத்தை வைத்துள்ள தமிழக ரசிகர்களின் மீது தோனியும் எப்போதும் பாசத்தையும் மரியாதையும் வைத்துள்ளார். அதனால் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு பிறகு சென்னை தான் தனது 2-வது வீடு என்று பலமுறை தெரிவித்த அவர் தனது வாழ்நாளின் கடைசி போட்டியில் சென்னை மண்ணில்தான் நடைபெறும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் தமிழக ரசிகர்களுக்காக அடுத்த 2023 சீசனில் சென்னை மண்ணில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று ஐபிஎல் 2022 தொடரின் முடிவில் வெளிப்படையாகவே அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் 2022 நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை கோப்பையை தக்க வைக்க தவறியதால் வீடு திரும்பிய அவர் நேற்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஞ்சியில் புறப்பட்ட அவர் லாவண்யா பிளானியா எனும் சிறப்பு மாற்று திறனாளி ரசிகையை நேரில் பார்த்து மகிழ்வித்த பின் சென்னை வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25-ஆவது வருட விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

- Advertisement -

சென்னை இன்னோரு வீடு:
அதில் சென்னை தனது 2-வது வீடு என்று மீண்டும் தெரிவித்த தோனி தாம் பள்ளி அளவில் கிரிக்கெட் விளையாடிய காரணத்தாலேயே இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பை பெற்றதாக தெரிவித்தார். அதன் காரணமாக இளைஞர்கள் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினால் நல்ல வருங்காலம் உள்ளது என்றும் அவர் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன். பள்ளி அளவில் மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடினால் தான் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். திறமையான வீரர்களை உருவாக்குவதில் மாவட்ட வாரியங்களுக்கு பொறுப்பு அதிகம். ஒரு மாவட்ட கிரிக்கெட் வெற்றி விழாவில் நான் பங்கு பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த தருணத்தில் ராஞ்சியில் உள்ள எனது மாவட்ட கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். வீரர்கள் தங்களது மாவட்டங்களுக்கு விளையாடுவதை பெருமையாக கருத வேண்டும். எனது மாவட்டத்திற்கு அல்லது பள்ளிக்கு நான் விளையாடாமல் போயிருந்தால் இந்தியாவிற்காக விளையாடும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது” என்று கூறினார்.

- Advertisement -

திருவள்ளூருக்கு வாழ்த்து:
“25 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் வாரியத்திற்கு எனது வாழ்த்துக்கள். அதன் செயலாளர் ஆர்என் பாபாவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவருக்கு மட்டுமல்லாமல் இந்த வாரியத்தில் உள்ள அனைவருக்கும் எனது மிகப்பெரிய வாழ்த்துக்கள்” என்று இது பற்றி தோனி மேலும் பேசினார்.

இந்த விழாவின் இறுதியில் தமிழ்நாடு விளையாட்டு செய்தியாளர்கள் வாரியத்தின் ஒரு அங்கமாக இருக்கும் திருவள்ளூர் மாவட்ட வாரியத்தின் சார்பில் 10 தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு தலா 3 லட்சம் காசோலை பரிசாக வழங்கப்பட்டது. அதை தோனி தனது கையால் பரிசளித்தார்.

இதையும் படிங்க : காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர் – திருமணத்தால் மீண்டும் யோகம் வருமா? – விவரம் இதோ

இந்த விழாவில் முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் சென்னை உரிமையாளர் சீனிவாசன், சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற தமிழக நட்சத்திர வீரர்களும் வீடியோ கால் வாயிலாக பங்கேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement