கடந்த 10ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கான போட்டி நடைபெற்றது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் பல தற்போது தீவிர போராட்டத்தில் குதித்தன.
இந்தப்போராட்டத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.தமிழக அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த தடைக்கோரியும் ஆங்காங்கே நடத்திவரும் போராட்டங்கள் வலுப்பெற்றன.
முன்னதாகவே தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,சீமான், பாரதிராஜா,கௌதமன், களஞ்சியம்,வெற்றிமாறன் போன்ற பலர் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராடிடுவோம் என்று கூறியிருந்தனர். மேலும் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் புகுந்து போராடிடுவோம் என்றும் எச்சரித்திருந்தனர்.
அதன்படி போட்டி நடைபெறவிருந்த 10ம் தேதி மாலை 5மணி முதலே போராட்டக்குழுவினர் சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளான அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இரண்டு மணி நேரத்தில் போராட்டக்காரர்கள் மளமளவென்று குவியத்தொடங்கியதால் மைதாத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடங்கள் அனைத்தும் முடங்கின.
இந்தப்போராட்டத்தில் இயக்குஞர்கள் வெற்றிமாறன்,அமீர்,பாரதிராஜா,சீமான் மற்றும் களஞ்சியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.போராட்டாக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.இதில் இயக்குஞர்கள் வெற்றிமாறன்,களஞ்சியம் உட்பட பலர் மீதும் தடியடி நடத்தப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சென்னை அணி வீரர்கள் மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் மைதானத்திற்கு வர காலதாமதமானது.இருப்பினும் பல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.போட்டி தொடங்கிய எட்டாவது ஓவரின் முதல் பந்து வீசப்பட்ட போது மைதானத்திற்குள் ரசிகர்களோடு ரசிகர்களாக மறைந்திருந்த நாம்தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மைதானத்தை நோக்கி செருப்பு மற்றும் ஷீ–க்களை வீசினர்.
இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக செருப்பு வீசியவர்கள் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர்.பின்னர் ஒருவழியாக பல களேபரங்களுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டத்தில் பெரும்பாலான உணர்வாளர்களும் போராட்டக்காரர்களும் கலந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைகள் முடங்கின.
அங்கு சுமார் 2000 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.இதனால் மிச்சம் சென்னையில் நடைபெறவுள்ள 6போட்டிகளும் பிரச்சனைகளின்றி நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது.அடுத்தடுத்து சென்னையில் நடக்கவுள்ள போட்டிகளின்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசாரை குவிக்க முடியாது எனக்கூறி காவல்துறையும் கைவிட்டுவிட்டது.
எனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னையில் நடைபெறவிருந்த மற்ற போட்டிகளை புனேவிற்கு மாற்றிட முடிவுசெய்துள்ளதாக தெரிகின்றது.அதனால் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளுக்காக ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தவர்களின் பணத்தை திருப்பித்தர நிர்வாகமும் முடிவு செய்திருந்தது.
அதனால் சென்னையில் அடுத்து நடைபெறவிருந்த ஆறு போட்டிகளுக்கான டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தை திரும்பி வாங்கிடவே இன்று காலை முதல் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர்.