வீடியோ : அடப்பாவமே, கேட்ச் பிடிக்கும் போது ரத்தம் சொட்ட காயமடைந்து பற்களை இழந்த இலங்கை வீரர் – ரசிகர்கள் சோகம்

Chamika Karunaratne
- Advertisement -

ஐபிஎல் தொடரை போல இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் எனப்படும் எல்பிஎல் டி20 தொடரின் 3வது சீசன் கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கு தரமான இளம் வீரர்களை அடையாளப்படுத்தும் வகையில் நடைபெறும் இத்தொடரில் 5 அணிகள் கோப்பைக்காக மொத்தம் 24 போட்டிகளில் மோதுகின்றன. அந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் கால்லே கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி பால்கன்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஹம்பன்தோட்டா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற கால்லே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சுமாராக செயல்பட்டு 121/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேப்டன் குசல் மெண்டிஸ் உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 19/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு இலங்கை வீரர் நுவனிடு பெர்னாண்டோ வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் ப்ரத்வைட் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் தவறாக கணித்து அடித்த காரணத்தால் டாப் எட்ஜ்ஜான அந்த பந்து நேராக மேலே சென்று கேட்ச்சாக மாறியது. அதை பிடிப்பதற்காக மேலே பார்த்துக் கொண்டே ஓடிய மற்றொரு இலங்கை வீரர் சமிகா கருணரத்னே பந்தை தவறாக கணித்து அதற்கு நேராக கீழே சென்றதுடன் கைகளால் பிடிக்க தவறினார்.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
அதனால் துரதிஷ்டவசமாக கையிலிருந்து நழுவிய பந்து நேராக வந்த வேகத்தில் அவருடைய வாயில் பட்டது. அதன் பின் கீழே வந்த பந்தை விடாமல் பிடித்து கேட்ச்சை முழுமையாக்கிய அவரை இதர வீரர்கள் பாராட்டிய நிலையில் கார்லஸ் ப்ரத்வைட் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் கொண்டாடினார். ஆனால் அங்கே தான் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் நேராக வாயில் பட்ட பந்து பற்களை பதம் பார்த்ததால் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. அதனால் வலியால் துடித்த கருணரத்னே தனது கைகளால் அதை துடைக்கும் போது கையுடன் சேர்ந்து 3 – 4 பற்கள் உடைந்து வந்ததை பார்த்த அனைவரது நெஞ்சங்கள் உடைந்தது.

அப்போதும் கூட ஒன்றும் ஆகவில்லை என்ற வகையில் அவர் சைகை கொடுத்தாலும் இதர வீரர்கள் சோகமடைந்து அவரது காயத்தை பார்த்து உடனடியாக மருத்துவரை உள்ளே வரவழைத்தனர். ஆனால் காயம் அதிகப்படியாக இருந்ததால் உடனடியாக மைதானத்திலிருந்து அவரை வெளியே அழைத்து வந்த மருத்துவர்கள் முழுமையான சிகிச்சைக்காக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றார்கள். இறுதியில் அவருக்கு 4 பற்கள் உடைந்ததாகவும் அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கண்டி அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது.

- Advertisement -

கிரிக்கெட்டால் பில் ஹுக்ஸ் எனும் ஆஸ்திரேலிய வீரர் உயிரையே விட்ட நிலையில் இங்கிலாந்தின் க்ரைக் கீஸ்வெட்டர், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் மார்க் பவுச்சர் ஆகியோர் தங்களது கண்களை இழந்தனர். அந்த வகையில் துரதிஷ்டவசமாக பற்களை இழந்த இவர் விரைவில் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது இலங்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

அதை தொடர்ந்து நடைபெற்ற அப்போட்டியில் 123 ரன்களை துரத்திய கண்டி அணி 15 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய கார்லஸ் பிரத்வெய்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: அந்த மாதிரி ப்ளேயர்ஸ கொடுத்தா நான் என்ன செய்ய முடியும்? என்சிஏ’வை வெளிப்படையாக விமர்சித்த ரோஹித் சர்மா

அப்படி வரும் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரின் லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலபட்ரீசை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement