கேப்டன்ஷிப் என்பதே வெறும் நடிப்பு – புதிய தத்துவம் சொன்ன ரமீஸ் ராஜா, கலாய்க்கும் ரசிகர்கள்

Ramiz Raja
- Advertisement -

வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடரின் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் 2009குப்பின் 2வது கோப்பையை வெல்ல நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் தலைமையில் களமிறங்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. நவீன கிரிக்கெட்டில் தரமான பேட்ஸ்மென்கள் இல்லாமல் தடுமாறிய பாகிஸ்தானுக்கு வரப்பிரசாதமாக வந்த பாபர் அசாம் அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 3 வகையான அணியிலும் நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நம்பிக்கை நட்சத்திர முதுகெலும்பு வீரராக அவதரித்தார்.

அதிலும் 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் ஒப்பிடும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்தார். பொதுவாகவே இதுபோன்ற ரன்களைக் குவிக்கும் பேட்ஸ்மேன்களின் கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்குவது ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடுகளில் வழக்கமாகும். அந்த வகையில் சிறப்பாக செயல்படத் துவங்கிய ஆரம்பத்திலேயே அவரிடம் கேப்டன்ஷிப் சுமையை பாகிஸ்தான் வாரியம் கொடுத்த நிலையில் அவரும் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

- Advertisement -

கேப்டன்ஷிப் நாடகம்:
இருப்பினும் பேட்டிங்கில் அசத்தும் அவர் கேப்டனாக முக்கிய நேரங்களில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதிலும் நடைபெற்று முடிந்த 2022 ஆசிய கோப்பை பைனலில் டாஸ் வென்றால் வெற்றி உறுதி என்ற நிலைமையை கொண்ட துபாய் மைதானத்தில் டாஸ் வென்றும் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கையை 58/5 என சுருட்டியும் வெற்றி பெற முடியாத அளவுக்கு அவரது கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது. ஏனெனில் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 58/5 என மடக்கிப் பிடித்த இலங்கையை மேற்கொண்டு 120 ரன்கள் அடிக்க விடும் அளவுக்கு பாபர் அசாமின் திட்டங்கள், வியூகங்கள் என அனைத்தும் மோசமாக இருந்தது.

அதைவிட இங்கிலாந்தை 17 வருடங்கள் கழித்து டி20 தொடரில் எதிர்கொண்ட பாகிஸ்தான் சொந்த மண்ணில் 4 – 3 (7) என்ற கணக்கில் மண்ணைக் கவ்வும் அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் சுமாராகவே இருந்தது. அப்படி சுமாராக கேப்டன்ஷிப் செய்யும் அவரை தற்போது நிறைய பாகிஸ்தான் ஊடகங்களும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக முக்கிய போட்டிகளில் ஏற்படும் அழுத்தமான நேரங்களை சமாளிக்க முடியாமல் அவர் திணறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

- Advertisement -

ஆனால் முன்பைவிட பாபர் அசாம் தற்போது கேப்டன்ஷிப் செய்வதில் முன்னேறியுள்ளார் என்று முன்னாள் வீரர் மற்றும் பாகிஸ்தான் வாரியத்தலைவர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். மேலும் அழுத்தமான நேரங்களை சமாளிக்க புன்னகை செய்வது, வெளிப்புறத்திற்கு கூலாக இருப்பது போன்ற பாடி லாங்குவேஜ் கொடுப்பது போன்ற அனைவரும் செய்ய கூடிய நடிப்புகளை அவரும் கச்சிதமாக செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது கேப்டன்ஷிப் என்பது 70% நடிப்பதை பொறுத்தது என்று புதுமையான தத்துவத்தை தெரிவித்த அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“பாபர் அசாம் கேப்டனாக நிறைய முன்னேறியுள்ளார். சமீபத்தில் அவரை சந்தித்த போது கேப்டன்ஷிப் என்பது 70% நடிப்பதை பொறுத்தது என்று அவரிடம் நான் கூறினேன். உங்களுடைய முகபாவனைகள் உங்களுடைய உணர்வுகள் அல்லது நீங்கள் அழுத்தத்தில் இருப்பதை காட்டக்கூடாது. ஏனெனில் அழுத்தமான உணர்வுகளை மறைக்காமல் உங்களது முகத்தில் காட்டினால் மொத்த அணியும் சரிந்து விடும். அதேசமயம் உங்களுடைய பாடி லாங்குவேஜ் மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் பாபர் அசாம் எப்போதும் அழுத்தமான சூழ்நிலையிலும் லேசாக சிரித்துக் கொண்டே அழுத்தங்களை சமாளிப்பதை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். இது பாபரின் சகாப்தம், இதில் நிறைய வைரங்கள் கிடைப்பதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

அதாவது சரியான வீரர்களை தேர்வு செய்வது, சரியான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பது போன்றவை வெறும் 30% கேப்டன்ஷிப் என்று தெரிவிக்கும் ரமீஸ் ராஜா என்ன ஆனாலும் ஒன்றுமே நடக்காதவாறு நடிப்பதே 70% உண்மையான கேப்டன்ஷிப் என்ற தத்துவத்தை கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு தத்துவத்தை வரலாற்றில் யாருமே சொன்னதில்லை என்றும் இதை பின்பற்றி தான் நீங்கள் கேப்டன்ஷிப் செய்த 5 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு 1 வெற்றியும் 4 தோல்வியையும் பெற்று கொடுத்தீர்களா என்று கிண்டலடிக்கிறார்கள்.

Advertisement