வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய அவர் துணைக் கேப்டனாகவும் அந்தஸ்து பெற்றார்.
ஆனால் நாளடைவில் மெதுவாக விளையாடிய ராகுல் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதே போல ஐபிஎல் தொடரிலும் சுமாராக விளையாடியதால் இந்திய வெள்ளைப்பந்து அணியில் அவர் ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன் பதவியை இழந்தார். அதன் பின் 2023 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் ராகுல் மீண்டும் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் செல்ல உதவினார்.
ரோஹித் சர்மா உறுதி:
இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் சுமாராக விளையாடியதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்த ராகுல் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
அதைப் பயன்படுத்தி மேற்கொண்டு வாய்ப்பு பெறுவது ராகுல் கையில் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலகில் குறைவான வீரர்களின் பயணம் மட்டுமே சுமூகமாக இருக்கும். கேஎல் ராகுல் தரத்தைக் கொண்டவர் என்பதை அனைவரும் அறிவோம். நான் கேப்டனானது முதல் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற மெசேஜை ஏற்கனவே கொடுத்துள்ளோம்”
உங்கள் கேரியர் உங்க கையில்:
“அவரிடமிருந்து சிறந்து செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவது எங்களுடைய வேலையாகும். தென்னாப்பிரிக்காவில் சதமடித்த அவர் கடைசியாக காயமடைவதற்கு முன் ஹைதராபாத்தில் 80 ரன்கள் குவித்தார். அதன் பின் எந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. திறமையுள்ள அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் தெளிவான மெசேஜ் கொடுத்துள்ளோம்”
இதையும் படிங்க: அவங்க இப்படி சொல்லி தான் தோத்துட்டு போனாங்க.. ஜாலி பண்ணட்டும்.. வங்கதேச சவாலுக்கு ரோஹித் பதில்
“எனவே ஹைதராபாத்தில் விட்டதிலிருந்து அவர் தொடர்வார் என்று நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் ஏன் அசத்த மாட்டார் என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புகள் தற்போது இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய நேரங்களை செலவழித்த ராகுல் தம்முடைய கேரியரை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்லப் போகிறார் என்பது அவருடைய கையில் தான் இருக்கிறது” என்று கூறினார்.



