
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1992 உலக சாம்பியனான பாகிஸ்தான் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவிடம் முதல் முறையாக தோற்றது. அப்படியே 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் உலகக் கோப்பையில் சென்னையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது.
அதை விட 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் விளையாடியது. ஆனால் அப்போட்டியில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் அமெரிக்காவிடம் தோற்றது. அதனால் அமெரிக்காவிடம் முதல் முறையாக தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் மற்றுமொரு அவமானத்தை சந்தித்தது.
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த பாகிஸ்தான் ஒரு மாத இடைவெளிக்கு பின் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரிலும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமின்றி ஃபிட்னஸிலும் வீழ்த்தும் திறமை தங்களிடம் இருப்பதாக அமெரிக்க வீரர் அலி கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்துவதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்”
“அவர்களுக்கு எதிராக மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம். அவர்களுக்கு எந்த அவமரியாதையும் கிடையாது. ஆனால் நாங்கள் தற்போது நல்ல அணியாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் முழு பலத்துடன் கூடிய அணியுடன் களமிறங்கும் போது பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த அணியையும் எங்களுடைய நாளில் வீழ்த்துவோம்”
இதையும் படிங்க: அஸ்வின் நம்பர் ஒன்.. ஆடாமலேயே முன்னேறிய ரோஹித், ஜெய்ஸ்வால்.. லேட்டஸ்ட் ஐசிசி ரேங்கிங்ஸ்
“எனவே பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் போட்டி நடைபெற்றால் அது சிறப்பானதாக இருக்கும். நாங்கள் தற்போது அழுத்தத்தில் இல்லை. உண்மையில் பாகிஸ்தான் அணி தான் தற்போது அழுத்தத்தில் இருக்கும். எனவே அவர்களுக்கு எதிரான போட்டியை மற்றொரு போட்டியாக நாங்கள் எடுத்துக் கொள்வோம். அவர்களை மீண்டும் தோற்கடிப்பதற்கான திறன் மற்றும் தன்னம்பிக்கை எங்களிடம் இருப்பதை அறிவோம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமின்றி ஃபிட்னஸ் அளவிலும் அவர்களை வீழ்த்த முடியும்” என்று கூறினார்.