எங்கேயோ தப்பு நடக்குது, கண்டுபிடிக்கிறேன் – பும்ரா காயத்தை பற்றி புதிய பிசிசிஐ தலைவர் அதிரடி நடவடிக்கை

MI Jaspirt Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பாகிஸ்தானை மெல்போர்ன் நகரில் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் நடந்த டி20 உலகக் கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த சாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் சவால் கொடுக்க வந்துள்ள நிலையில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளது பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

Bumrah

- Advertisement -

ஏனெனில் கடந்த 5 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய வித்தியாசமான பௌலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்திய வேகப்பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக உருவாக்கியுள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் கச்சிதமாகப் பந்து வீசக்கூடிய அவர் டெத் ஓவர்களில் யார்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படுகிறார்.

எங்கேயே தப்பு நடக்குது:
மறுபுறம் அவரை தவிர்த்து தேர்வாகியுள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். அதனால் ஆரம்பத்திலேயே இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து விட்டதாக அவர் காயத்தால் வெளியேறிய போது இந்திய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. முன்னதாக இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாக இந்தியா பங்கேற்ற ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற முக்கியமற்ற தொடர்களில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

Jasprith Bumrah

அதையும் தாண்டி கடைசி நேரத்தில் வெளியேறியுள்ள அவர் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மட்டும் மும்பை பங்கேற்ற 60 போட்டிகளில் 59இல் பங்கேற்றுள்ளார். ஆனால் அதே காலகட்டத்தில் இந்தியாவுக்காக 70 போட்டிகளில் வெறும் 16இல் மட்டுமே விளையாடியுள்ளார். மேலும் அவரது காயம் குணமடைவதற்கு 6 மாதம் தேவைப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால் சரியாக 2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக குணமடைந்து அவர் மும்பைக்காக மீண்டும் விளையாடுவார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

அதுபோக அவருக்கு பதில் விளையாடுவார் என்று கருதப்பட்ட தீபக் சஹர் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பினாலும் ஒரு மாதம் கூட விளையாடாமல் மீண்டும் காயத்தால் வெளியேறியுள்ளார். அதற்கு முன்பாக மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்து வெளியேறினார். இப்படி உலகக் கோப்பைக்கு முன்பாக 3 முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் காயம் ஏற்படுவது இயற்கையானது என்றாலும் காயமடைந்து குணமடைந்து வரும் வீரர்கள் தசைப்பிடிப்பு போன்ற காயங்களை சந்தித்து மீண்டும் வெளியேறுகிறார்கள்.

Deepak Chahar IND

அப்படியானால் பெங்களூருவில் வீரர்களின் காயங்களை சோதித்து குணமடைய உதவும் தேசிய கிரிக்கெட் அகடமி என்ன செய்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் முக்கிய வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கக்கூடாது என்ற கோரிக்கைகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பாக பும்ரா வெளியேறியது அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் புதிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி இதற்கான தவறு எங்கே நடக்கிறது என்பதை விரைவில் ஆராயப்படும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பைக்கு 10 நாட்கள் முன்பாக ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்து வெளியேறுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவருக்கு பதில் யார் விளையாடுவார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. எனவே அவரைப் போன்ற முக்கிய வீரர்கள் ஏன் அடிக்கடி காயமடைந்து வெளியேறுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது”

Roger-Binny

“அதிலும் அதிகப்படியான போட்டிகளில் விளையாடாத போதிலும் இவர்கள் எப்படி காயமடைகிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியுள்ளது. இப்போது மட்டுமல்ல கடந்த 4 – 5 வருடங்களாகவே இந்த பிரச்சனை இந்திய அணியில் நிலவுகிறது. அதற்காக எங்களிடம் நல்ல பயிற்சியாளர்கள் இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால் முக்கிய வீரர்கள் அதிகப்படியான பணிச்சுமையில் விளையாடுகிறார்களா அல்லது அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடுகிறார்களா என்பதை சோதிக்க வேண்டியுள்ளது. அதை கண்டறிந்து அதற்காக ஏதாவது செய்ய வேண்டும். அதுவே என்னுடைய முதல் வேலையாகும்” என்று கூறினார்.

Advertisement