ஆண்டர்சன் போல் பெட்டி பாம்பாக அடக்கும் ஆஸி பவுலர் – 2018 போல் விராட் கோலி பதிலடி கொடுப்பாரா, முக்கிய புள்ளிவிவரம்

Anderson
- Advertisement -

வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இதில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க போராட உள்ளது. அதை விட 2018/19, 2019/20 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் சாய்த்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா முழுமூச்சுடன் விளையாட உள்ளது.

AUs vs IND

- Advertisement -

மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. அத்துடன் கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்வ வைத்த இந்தியா இம்முறையும் நிச்சயமாக வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரு அணிகளிலுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் அதிரடியான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடருக்கு உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஆண்டர்சன் போல்:
பொதுவாகவே இது போன்ற தொடர்களில் இரு அணிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில வீரர்கள் கடுமையாக மோதி தங்களது பலத்தை நிரூபிப்பார்கள். அந்த வகையில் அஷ்வின் – ஸ்மித், ஹேசல்வுட் – புஜாரா ஆகியோரிடையே இத்தொடரில் கடுமையான மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் – இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக கருதப்படும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோரது மோதல் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

anderson 1

ஆனால் அதில் இதுவரை பட் கமின்ஸ் தனது அதிரடியான வேகத்தால் விராட் கோலியை பெட்டி பாம்பாக அடக்கி வைத்துள்ளார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை பட் கமின்ஸை 10 இன்னிங்ஸில் எதிர்கொண்ட விராட் கோலி வெறும் 82 ரன்களை 16.40 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். அதில் 5 முறை அவரிடம் அவுட்டாகியுள்ளார். இதைப் பார்க்கும் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் – விராட் கோலி கதை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும் என்று சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 50 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி 4 முறை அவுட்டாகி பெட்டிப் பாம்பாக அடங்கினார். அந்த சுற்றுப்பயணம் அப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே விராட் கோலி கேரியரில் மிகவும் மோசமான தருணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்காக மனம் தளராமல் தன்னுடைய பேட்டிங்கில் தேவையான முன்னேற்றத்தை செய்த விராட் கோலி அதற்கு அடுத்ததாக 2018ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதே ஆண்டர்சனை அபாரமாக எதிர்கொண்டார்.

அந்த மோதலில் 270 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 13 பவுண்டரிகள் உட்பட 114 ரன்கள் அடித்ததுடன் ஒரு முறை கூட அவுட்டாகமல் தன்னை ஒரு சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். எனவே அதே போலவே இது வரை பட் கமின்ஸ்க்கு எதிராக தடுமாறி வரும் கதைக்கு தனது பேட்டிங்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இம்முறை நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விராட் கோலி பதிலடி கொடுப்பாரா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் புதுசா கண்டுபிடிப்பதில் அவர மாதிரி ப்ளேயரை பார்த்ததில்லை – இந்திய வீரருக்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு

மேலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலிய கேப்டனுக்கு பதிலடி கொடுப்பார் என்று நம்பலாம்.

Advertisement