IND vs AUS : 2 வீரர்கள் வெளியேறினாலும் கேப்டனுடன் இந்தியாவை மிரட்ட வரும் 2 தரமான நட்சத்திர ஆஸி வீரர்கள் – கம்பேக் நடக்குமா

Mitchell Starc
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் படுமோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக சந்தித்த வரலாற்று கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பையும் தவற விட்டுள்ளது. அத்துடன் 2014/15க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் அந்த அணி இத்தொடரில் பல வகைகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது என்றே கூறலாம்.

முதலில் பிட்ச் பற்றி விமர்சித்த அளவுக்கு வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணியின் குற்றச்சாட்டுகளை அதே மைதானத்தில் 400 ரன்களை அடித்த இந்தியா பொய்யாக்கி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. அத்துடன் பொதுவாகவே தோல்வியை சந்தித்தாலும் போராடி தோற்பதற்கு பெயர் போன ஆஸ்திரேலியர்கள் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் 3வது நாளின் 2 மணி நேரத்தில் முறையே 91, 114 ரன்களுக்கு மட மடவென விக்கெட்டுகளை இழந்து படுமோசமாக தோற்றது அந்நாட்டவர்களை கடுப்பாக வைத்துள்ளது.

- Advertisement -

கம்பேக் நடக்குமா:
குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திணறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் அடித்து கிளீன் போல்ட்டானது அந்நாட்டு முன்னாள் வீரர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதனால் தற்போது மைக்கேல் கிளார்க், மைக் ஹசி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்து வரும் அந்த அணியிலிருந்து காயம் காரணமாக டேவிட் வார்னர் மொத்தமாக வெளியேறியுள்ளார். அத்துடன் ஏற்கனவே ஜோஸ் ஹேசல்வுட் வெளியேறியதால் மேலும் பின்னடைவை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா அடுத்த 2 போட்டிகளில் வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்த அவர் தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் விளையாட உள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

அத்துடன் அதே தொடரில் காயமடைந்த இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 100% குணமடைந்துள்ளதால் இத்தொடரில் விளையாட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் அக்சர் பட்டேல், அஸ்வின் போன்ற ஆல் ரவுண்டர்கள் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றினர். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் அது போன்ற வீரர்கள் இல்லாததால் இந்த 2 வீரர்கள் குணமடைந்த கையுடன் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதில் இதுவரை 10 அரை சதங்களை அடித்துள்ள மிட்சேல் ஸ்டார்க் 2 அரை சதங்களை இந்தியாவுக்கு எதிராக அடித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 2013இல் மொஹாலியில் இந்தியாவுக்கு எதிராக 99 ரன்கள் குவித்த அவர் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். அதே போல் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் இருக்கும் கேமரூன் கிரீனை ஐபிஎல் தொடரில் மும்பை அணி பெரிய கோடிகளை செலவிட்டு வாங்கும் அளவுக்கு மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்த இருவரில் ஏற்கனவே மிட்சேல் ஸ்டார்க் டெல்லி போட்டிக்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து விட்டார்.

இதையும் படிங்க:நேரலையில் மோதலாம் வாங்க, வசமாக சிக்கியதால் சமாதான புறாவை விட்ட சோப்ரா – பிரசாத்தின் இறுதி பதில் இதோ

எனவே 2வது போட்டியை முடித்துக் கொண்டு குடும்பத்தை பார்ப்பதற்காக நாடு ஆஸ்திரேலியா சென்றுள்ள கேப்டன் பட் கமின்ஸ் மீண்டும் திரும்பும் போது அவருடன் கேமரூன் கிரீன் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். எனவே 2 முக்கியமான வீரர்கள் தங்களது அணியில் இணைவதால் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 2 – 2 (4) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியா கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement