
இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு பேட்டிங்கில் அசத்தினார். மேலும் 2014ஆம் ஆண்டு இந்தியா ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது.
அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தன்னுடைய ஆக்ரோஷம் நிறைந்த அணுகுமுறையை பின்பற்றி அணியை முழுமையாக மாற்றினார். மேலும் ஃபிட்னஸ் கடை பிடித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலைமையையும் விராட் கோலி கொண்டு வந்தார். அந்த அணுகுமுறையைப் பின்பற்றி எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்தது.
குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்ததை மறக்க முடியாது. மொத்தத்தில் 68 போட்டிகளில் செயல்பட்ட விராட் கோலி 40 வெற்றிகளைப் பெற்று வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும் அனைவரும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை கொண்டு வரப்பட்டதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் வெற்றி பெற 20 விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டும் என்ற அணுகுமுறையை பவுலர்களிடம் விராட் கோலி உண்டாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அதுவே விராட் கோலி தலைமையில் இந்தியா நம்பர் ஒன் அணியாக நீண்ட காலம் அசத்தக் காரணம் என்று தெரிவிக்கும் புஜாரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “2015இல் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்திய அணியில் ஃபிட்னஸ் கலாச்சாரத்தைக் கொண்டு வந்தார்”
“அனைத்து அணிகளும் தங்களுடைய ஃபிட்னஸ் லெவலை உயர்த்துவதற்கு மிகவும் கடினமாக உழைத்த சமயத்தில் இந்திய அணி ஃபிட்னெஸ் துறையில் முன்னேற வேண்டியிருந்தது. அப்போது கேப்டனாக வந்த விராட் கோலி அதைச் சரியாக செய்தார். அந்த சமயத்தில் வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களுடைய ஃபிட்னஸில் கடினமாக உழைத்தனர்”
இதையும் படிங்க: அந்த குப்பை காரணத்துக்காக கில்லை கேப்டனாக்காதீங்க.. இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா வேணும்.. கவாஸ்கர் வெளிப்படை
“அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக கவனம் செலுத்தினார். அவர் இந்தியாவை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்ற விரும்பினார். விராட் கோலி கேப்டனாக இருந்த சமயங்களில் அவர் எப்போதும் 20 விக்கெட்டுகளை எடுக்க விரும்புவார். அதற்காக களத்தில் நிறைய ஆர்வத்தைப் போட்டோம். ஒவ்வொரு வீரரும் 20 விக்கெட்டுகள் எடுப்பதற்கான பரிந்துரைகளைக் கொடுத்தோம். நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடினோம்” என்று கூறினார்.