ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 33 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் குவித்தனர்.
இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகனாக 80 ரன் அடித்த ரோகித் சர்மா தேர்வானார். இந்த போட்டியில் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக பின்வரிசையில் ரசல் இருந்தார்.
ஆனால் எப்போதும் வழக்கமாக பின்வரிசையில் ராட்சஸ சிக்சர்களை அடித்து ரசிகர்களை மகிழ வைக்கும் ரசல் இந்த போட்டியில் 11 பந்துகளை சந்தித்து 11 ரன்களை மட்டுமே அடித்து பும்ராவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். வழக்கமாக தனது காட்டடி மூலம் சுழற்றியடிக்கும் ரசல் இம்முறை பும்ராவுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியவில்லை.
பும்ரா வீசிய 16-வது ஓவரில் முதல் பந்திலேயே கிளீன் போல்டாகி ரசல் நடையை கட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் முதல் 3 ஓவர்களில் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மொத்தத்தில் நேற்று அவருடைய சிறப்பான பந்துவீச்சை மீண்டும் ஒருமுறை வழங்கினார் என்றே கூறலாம்.