வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் “ஆண்டப் பரம்பரை” என்பதற்கேற்ப உலகில் அனைத்து அணிகளையும் தெறிக்க விட்டு வந்தது. அந்த அணியில் 60, 70, 80களில் வெறித்தனமான வேகத்தில் வீசும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைந்திருந்தனர். அதனால் அந்த காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் அசுரனைப் போல விளையாடி நிறைய வெற்றிகளைப் பெற்றது.
1975, 1979 ஆகிய முதல் 2 ஐசிசி உலகக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் 21ஆம் நூற்றாண்டில் தடுமாறத் துவங்கியது. மறுபுறம் தங்களுடைய வீரர்களுக்கு போதுமான சம்பளத்தைக் கொடுக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வாரியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால் பெரும்பாலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கும் பணத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
லாய்ட், லாரா விமர்சனம்:
அதனால் சமீப காலங்களாகவே திணறலாக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அதன் உச்சமாக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து வெஸ்ட் இண்டீஸ் மோசமான சாதனை படைத்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வீழ்ச்சிக்கு இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் நடைபெறும் ஐபிஎல் முக்கிய காரணமாக இருப்பதாக ஜாம்பவான் பிரைன் லாரா மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அப்போதெல்லாம் நாங்கள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவோம். சிலர் இங்கிலாந்தில் கவுண்டி தொடரில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட முயற்சிப்பார்கள்”
இந்தியா காரணம்:
“இப்போது மேற்கு, கிழக்கு அணிகள் கால் தடம் பதித்து ஒப்பந்தம் போட்டு வீரர்களை வாங்குகிறார்கள். அது வீரர்களின் தவறல்ல” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வீழ்ச்சிக்கு “ஐசிசி வருமானப் பகிர்வு மாடல்” முக்கிய காரணமாக இருப்பதாக விமர்சித்தார். அதாவது ஐசிசி வருமானப் பகிர்வில் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக பணத்தைப் பெறுகிறது.
இதையும் படிங்க: இந்திய பவுலர்கள் அடிக்கடி அதைக் கேட்டு அழுது புலம்புவது எனக்கு பிடிச்சுருக்கு.. அலெஸ்டர் குக் கிண்டல்
அதுவே வெஸ்ட் இண்டீஸ் வாரியத்திற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய டாப் 3 நாடுகள் அனைத்து பணத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பெரிய ஒளிபரப்பு உரிமைகளை ஒப்பந்தம் செய்கிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, போன்ற அணிகள் போட்டியிட வேண்டுமெனில் நீங்கள் அவர்களுக்கும் நிறைய பகிர்வைக் கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.



