ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. கடந்த உலகக் கோப்பையை காயத்தால் தவற விட்ட ஜஸ்பிரித் பும்ரா இம்முறை இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சுத் துறையின் ஆணிவேராக பார்க்கப்படுகிறார் என்று சொல்லலாம்.
ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் தன்னுடைய தரமான பந்துகளால் உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருகிறார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக்கூடிய டி20 கிரிக்கெட்டில் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்தை வீசி விக்கெட்டை எடுக்கும் திறமை கொண்ட அவர் கருப்பு குதிரையாக வலம் வருகிறார். அந்த வரிசையில் நிறைவு பெற்ற 2024 ஐபிஎல் தொடரில் பும்ரா 14 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்தார்.
பிரட் லீ பாராட்டு:
எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் உலகிலேயே தற்சமயத்தில் ஜஸ்பிரித் பும்ராவை போல நிறைய பவுலர்கள் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ பாராட்டியுள்ளார்.
எனவே ஐபிஎல் போன்ற டி20 தொடரில் பவுலர்கள் யார்க்கர் பந்துகளை அதிகமாக வீச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் பும்ராவை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் சிறப்பான யார்க்கர் பந்துகளை வீசுவதை பார்க்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக யார்க்கர் பந்துகளை வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன்”
“டெத் ஓவர்களில் அவர்கள் யார்கர் பந்துகளை செயல்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை. 17 வருட ஐபிஎல் தொடரை நீங்கள் திரும்பி பார்க்கும் போது யார்க்கர் பந்துகளுக்கு எதிராக சராசரியான ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் குறைவாகவே இருக்கிறது. அது ஒரு பந்து அல்லது குறைவான பவுலர்கள் மட்டுமே யார்க்கரை செயல்படுத்துகிறார்கள் என்பதை எனக்கு காட்டுகிறது”
இதையும் படிங்க: இது ஆரம்பம் மட்டுமே.. இதான் அடுத்த மிஷன்.. சிஎஸ்கே – மும்பை அணிகளை எச்சரித்த கெளதம் கம்பீர்
“தற்போது நீங்கள் யார்க்கர் பந்தை வீசும் போது பேட்ஸ்மேன்கள் கீழே சென்று உங்களை தலைக்கு மேலே ஸ்கூப் ஷாட்டை பயன்படுத்தி அடிக்கிறார்கள். அது பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் 2 வீரர்களை பின்னே நிற்க வைத்து விட்டு தேர்ட் மேனை ஃபைன் பகுதியில் நிற்க வைத்து சரியான ஃபீல்டிங்கை செட்டிங் செய்து யார்க்கர் பந்துகளை வீசலாம்” என்று ஆலோசனையும் தெரிவித்தார்.



