ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ 1999ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடி 76 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 310 விக்கெட்டுகளையும், 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 380 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவர் விளையாடிய காலத்தில் பல்வேறு தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசி முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் தலை சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் ஆகியோர் யாரென்று அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னர் பிரெட் லீ அளித்த பேட்டியில் கூறியதாவது :
என்னை பொருத்தவரை தற்போது உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட்கோலி தான். அவரது ரெக்கார்டுகளை நீங்கள் பார்த்தாலே போதும் அவர் எவ்வளவு சிறப்பான வீரர் என்பதை உணர்வீர்கள். கோலிக்கு வயது ஆக ஆக அவர் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் கிரிக்கெட்டில் அவரது அறிவு என்பது அபரிதமானது. அதேபோன்று பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை என்னுடைய ஃபேவரைட் பவுலர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் தான் அவருடைய வேகம் மற்றும் தரம் ஆகியவை தான் அவரை தற்போது நம்பர் ஒன் இடத்தில் வைத்துள்ளது. ஒரு சிறந்த பந்துவீச்சாளருக்கான அனைத்து விதமான திறன்களும், நல்ல டெக்னிக்கும் அவரிடம் உள்ளது.

தற்போது உள்ள மாடர்ன் டே கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலியும், பந்து வீச்சாளராக பேட் கம்மின்ஸும் வலம் வருகிறார்கள் என பிரெட் லீ கூறினார். அதே போன்று தான் பந்துவீசிய காலத்தில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகியோர் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



