இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஆனால் 2வது போட்டியில் அதற்கும் சேர்த்து இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 587, 427/6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 407 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இறுதியாக 608 என்ற இமாலய இலக்கைத் துரத்திய இங்கிலாந்தை 271 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பர்மிங்காமில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது.
எதிர்பாராத அடி:
இந்திய அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 269, 161 பந்து வீச்சில் ஆகாஷ் தீப் 4, 6 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்கள். இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்று பிட்ச்சை தவறாக கணக்கிட்டு முதலில் பவுலிங் செய்ததும், 211/5 என சரிந்த இந்தியாவை விரைவாக அவுட் செய்யாததுமே தோல்விக்கு காரணமானதாக இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
அதைப் பயன்படுத்தி இளம் இந்தியா 587 ரன்கள் அடிக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தத் தோல்விக்காக பஸ்பால் அணுகுமுறையை மாற்றப் போவதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “திரும்பிப் பார்க்கையில் நாங்கள் டாஸ் வென்ற போது வாய்ப்பை தவற விட்டோம். அது நியாயமானது”
அதுக்குன்னு பஸ்பால மாறாது:
“பிட்ச் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதை நாங்கள் கொஞ்சம் தவறாக கணக்கிட்டோம். 200/5 என இந்தியா தடுமாறிய நிலையை நாங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். டாஸ் வென்று நன்றாக பவுலிங் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் விளையாடும் நீங்கள் எதிரணி 580 ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள். அங்கிருந்தே நாங்கள் பின் தங்கினோம்”
இதையும் படிங்க: 367 ரன்ஸ்.. என்னா மனசுயா.. லாராவுக்காக 400 அடிக்காமல் டிக்ளேர் செய்த முல்தர்.. ஆனாலும் 73 வருட உலக சாதனை
“இதற்காக நாங்கள் எங்களுடைய திட்டங்களை உடைக்கப் போவதில்லை. பிட்ச் வேறு மாதிரியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது அப்படி அமையவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது.



