வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ கடந்த 2004-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள். 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகள் என அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
ஓய்வுபெற்ற கரீபியன் ஜாம்பவான் :
அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 161 போட்டியில் விளையாடியுள்ளார். இது தவிர்த்து உலகில் உள்ள பல்வேறு முன்னணி டி20 லீக் தொடர்களிலும் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
இவரது சிறப்பம்சமே இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிப்பதும் பந்துவீச்சில் தேவையான போது சரியான நேரத்தில் கைகொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதும் தான். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் ஒவ்வொரு முறை விக்கெட்டை வீழ்த்திய பின்னரும் இவர் நடனமாடி கொண்டாடும் விதத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என மூன்று துறையிலும் அசத்தும் இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது 40 வயதை எட்டியுள்ள பிராவோ ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் சிஎஸ்கே அணியில் விளையாடும் போதே ஓய்வு பெறுவதாக அறிவித்து ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது கடைசி தொடராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் கரிபியன் லீக் தொடர் இருக்கும் என்றும் இந்த தொடருடன் தான் ஓய்வு பெறுகிறேன் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கரீபியன் மக்களுக்கு முன் என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறேன்.
இதையும் படிங்க : இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தது மட்டுமல்லாமல் முதல் இங்கிலாந்து வீரராக ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை
என்னுடைய பயணம் துவங்கிய இடத்திலேயே முடிய உள்ளதை நினைத்து மகிழ்ச்சி. இதுவரை நான் விளையாடிய அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



