இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய வீரர்களுக்கு புதிதாக 10 கட்டுப்பாட்டு விதிமுறைகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதில் வெளிநாட்டு தொடர்களுக்கு குடும்பங்கள் வீரர்களுடன் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விதிமுறையாக பார்க்கப்படுகிறது. அது போக இந்திய வீரர்கள் எப்போதும் ஒரே ஹோட்டலில் ஒன்றாக தங்கி பயிற்சிகளை எடுத்து விளையாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு அழுத்தம்:
இந்நிலையில் குடும்பம் அனுமதிக்கப்படாது என்ற பிசிசிஐ விதிமுறை விராட் கோலிக்கு தான் அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற விதிமுறைகள் வீரர்கள் அழுத்தம் இல்லாமல் சுதந்திரத்துடன் விளையாட உதவாது என்றும் அவர் மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஹோக் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலிக்கு தற்போது குடும்பம் இருக்கிறது. களத்திற்கு வெளியே அவருக்கு மற்ற வேலைகள் இருக்கும். உலகம் முழுவதிலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் டாமினேட் செய்த போது அவருக்கு குடும்பம் இல்லை. எனவே அவருடைய பார்ம் என்பது கிரிக்கெட்டை மட்டும் பொருத்தது அல்ல. களத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்து அமைகிறது”
தேவையற்ற விதிமுறைகள்:
“விராட் கோலிக்கு களத்தை விட களத்திற்கு வெளியே நிறைய டிராமா இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய தட்டில் அதிகப்படியாக சென்றுள்ளார் என்று நினைக்கிறேன்
அதனாலேயே தற்சமயத்தில் அவரால் அசத்த முடியவில்லை. தற்போது குடும்பங்கள் பற்றி பிசிசிஐ கொண்டு வந்துள்ள புதிய விதிமுறை விராட் கோலிக்கு இன்னும் அதிகமான அழுத்தத்தை கொடுக்கும்”
இதையும் படிங்க: வருண் இப்போ இந்திய அணியின் கேம் சேஞ்சர்.. லாரா, யுவி, வெட்டோரி உதவி பற்றி அபிஷேக் பேட்டி
“ஏனெனில் உங்களுக்கு சமநிலை வேண்டும். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் முடிந்தளவுக்கு வீரர்கள் தங்களுடைய குடும்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். அதிலும் தற்சமயத்தில் இந்திய அணி அதிகமாக பயணம் செய்து விளையாடுவதால் வீரர்களுடன் குடும்பங்கள் இருப்பது நல்ல உணர்வை கொடுக்கும்” என்று கூறினார். முன்னதாக சதத்தை அடிக்கும் போது தமது மனைவி மைதானத்தில் இருந்தால் அவருக்கு விராட் கோலி பேட்டில் முத்தத்தை பறக்க விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



