இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களாகவே டெஸ்ட் போட்டிகளில் தடுமாறுகிறார் என்பதே உண்மையாகும். ஏனெனில் 2021 ஜனவரி மாதம் விராட் கோலி 27 சதங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் முறையே 26, 21, 17 சதங்கள் அடித்திருந்தார்கள். அப்படியே 4 வருடங்கள் கழித்து தற்போது பார்க்கும் போது விராட் கோலி மேற்கொண்டு 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஆனால் அபாரமாக செயல்பட்டு 12000 ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் 33 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கரை நெருங்கி வருகிறார். அதே போல கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்மித் ஆகியோரும் தலா 32 சதங்கள் அடித்து நல்ல முன்னேற்றத்தை காண்பித்து வருகிறார்கள். இருப்பினும் சச்சினுக்குப் பின் இந்தியாவின் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி கடந்த இங்கிலாந்து தொடரில் சொந்த காரணத்துக்காக 5 போட்டிகளிலும் விளையாடவில்லை.
தடுமாறும் கோலி:
தற்போதைய வங்கதேச தொடரிலும் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் அரை சதம் கூட அடிக்காத அவர் ஏமாற்றத்தைக் கொடுத்தார். இந்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்வதற்கு விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்து பெரிய ரன்கள் குவிப்பது அவசியம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து விராட் கோலி கழற்றி விடப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த 15 வாரங்களில் இந்தியா விளையாடும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி விளையாட வேண்டும். அதில் அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பார்க்கலாம்”
டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
“உண்மையில் தற்போது அவர் முன்னேற வேண்டிய நிலையில் உள்ளார். அவர் தனது ஆட்டத்தை தூக்க வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க வேண்டும். அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமெனில் அதற்கு நம்பர் 4வது இடத்தில் விளையாடும் அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருக்கும். நம்பர் 4 மிகவும் முக்கியமான இடமாகும். அது தான் போட்டியை கட்டுப்படுத்தும் இடமாகும். இந்திய அணியில் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள் உள்ளனர்”
இதையும் படிங்க: சிங்கம் மாதிரி போனாரு.. 2019இல் அம்பயர்களுடன் சண்டையிட்ட பின் தோனி சொன்னது பற்றி மோஹித் சர்மா
“எனவே அவர்களுக்கு விராட் கோலி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது அவசியம். அதை விராட் கோலி செய்தால் இந்தியாவை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் தோற்கடிப்பது கடினம். அதற்கு விராட் கோலி சிறப்பாக செயல்பட துவங்க வேண்டும். இல்லையெனில் தேர்வாளர்கள் இளம் வீரர்களை நோக்கி நகர்வார்கள் அல்லது உங்களுக்கே அதிக வாய்ப்பு கொடுப்பது பற்றி யோசிப்பார்கள்” என்று கூறினார்.



