தீபக் சஹர் மன்கட் செய்யவில்லை என்றாலும் கிரிக்கெட்டின் நேர்மை எங்கே? – முன்னாள் ஆஸி வீரர் ஆதங்கத்துடன் கேள்வி

Deepak-Chahar Mankad
- Advertisement -

விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் கடைசியாக சொந்த மண்ணில் உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொண்ட அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களில் வெற்றிகளை பதிவு செய்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் வழக்கம் போல பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அதிரடியாக 227/3 ரன்கள் சேர்த்த போது 3வது விக்கெட்டுக்கு ரிலீ ரோசவ் உடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் த்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 23 (18) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டனார்.

இருப்பினும் 16வது ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாகவே வெள்ளைக் கோட்டை விட்டு அதிக தூரம் வெளியேறிய அவரை பந்து வீசிய இந்திய பவுலர் தீபக் சஹர் ரன் அவுட் செய்யாமல் எச்சரிக்கை மட்டும் கொடுத்தார். ஒருவேளை அந்த சமயத்தில் ரன் அவுட் என்று புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள மன்கட் செய்திருந்தால் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமையாமல் தென்னாபிரிக்கா இன்னும் சற்று குறைவான ரன்களை எடுத்திருக்கும். அதனால் இந்தியாவும் வெற்றி பெறுவதற்கு சற்று அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

- Advertisement -

வரவேற்பு ஆனால்:
உலக அளவில் தற்சமயத்தில் மிகப் பெரிய சர்ச்சையாக திகழும் இந்த அவுட் ஆரம்பம் முதலே நடைமுறையில் இருந்தாலும் முன்னாள் இந்திய வீரர் மன்கட் செய்ததிலிருந்து அவரது பெயரில் அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்குப் புறம்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால் விதிமுறைகள் என்றால் அனைவருக்கும் சமம் என்ற நிலைமையில் பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தால் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மென்கள் மட்டும் இவ்வாறு ஒருசில அடிகள் வெளியேறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்பதே நிதர்சனம்.

அதனாலேயே அதை தைரியமாக செய்து குரல் கொடுத்த தமிழக வீரர் அஷ்வினின் கோரிக்கையை ஏற்ற எம்சிசியும் ஐசிசியும் சமீபத்தில் அதை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவிற்கு மாற்றியது. ஆனாலும் சமீபத்தில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை அவ்வாறு அவுட் செய்தபோது ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து விமர்சித்தது. மேலும் அவ்வாறு செய்வதற்கு முன்பாக எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று விதிமுறையில் சொல்லப்படாத கூற்றை பின்பற்றுமாறு நிறைய கோரிக்கைகள் எழுந்துள்ளன.

- Advertisement -

அந்த நிலைமையில் விதிமுறை இருந்தும் அதை பயன்படுத்தாமல் தீபக் சாஹர் செய்த இந்த செயலை பாராட்டும் அனைவரும் விதிமுறையை மீறிய பேட்ஸ்மேனை ஏன் விமர்சிக்கவில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் தீபக் சஹர் நேர்மையை பின்பற்றுவதாக பாராட்டும் அனைவரும் முடிந்தளவுக்கு நேர்மை தன்மையுடன் அம்பயர்கள் கொடுக்கும் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் டிஆர்எஸ் ரிவியூ செய்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மொத்தத்தில் கிரிக்கெட்டின் நேர்மைத் தன்மை என்பது அனைத்து இடங்களிலும் சமமாக இல்லாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுவதாக வேதனை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது ட்வீட்டரில் பேசியுள்ளது பின்வருமாறு.

“அந்த நல்ல செயலுக்காக தீபக் சஹர் பாராட்டப்படுகிறார். ஆனால் அந்த இடத்தில் பேட்ஸ்மேன் விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக யாருமே ஏமாற்றமடையவில்லை. அங்கே பேட்ஸ்மேன் விதிமுறையை மீறி விட்டார், பவுலர் விதி முறையை பயன்படுத்தவில்லை. அதே சமயம் அம்பயர்கள் வழங்கும் தீர்ப்பை டிஆர்எஸ் முறையை வைத்து நாம் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் “கிரிக்கெட்டின் நேர்மைத் தன்மை” என்பது தேவையற்றதாக விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுவது போல அந்த இடத்தில் தீபக் சஹர் எச்சரிக்கை மட்டும் செய்ததற்காக பாராட்டிய யாருமே திரிஷன் ஸ்டப்ஸ் விதிமுறையை மீறியதாக விமர்சிக்கவில்லை. இதனால் கிரிக்கெட்டின் நேர்மைத் தன்மை, அற நெறியுடன் விளையாடுவது என்ற விதிமுறைகள் அனைத்தும் இன்னமும் சமமில்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் பவுலர்களுக்கு பாதகமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement