
இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தி பெறுகிறார். கடந்த 16 வருடங்களில் 26000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து 80 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவர் உடைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக 2021 ஜனவரி மாதம் விராட் கோலி 27 சதங்கள் அடித்திருந்தார். மறுபுறம் 2021 ஜனவரி மாதம் வெறும் 17 சதங்கள் எடுத்திருந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் அதன் பின் அபாரமாக செயல்பட்டு தற்போது 33 சதங்கள் அடித்து 12000 ரன்களையும் கடந்துள்ளார்.
ஆனால் கடந்த 4 வருடங்களில் மேற்கொண்டு 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ள விராட் கோலி இன்னும் 8871 ரன்களிலேயே தடுமாறுகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய வருடங்களில் விராட் கோலி தன்னுடைய வேகத்தை இழந்து விட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் 15921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சினை முந்தி உலக சாதனை படைக்கும் வாய்ப்பை விராட் கோலி கிட்டத்தட்ட விட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மறுபுறம் 12000 ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் இன்னும் 3519 ரன்கள் குவித்து சச்சினை முந்துவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் ப்ராட் ஹோக் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே விராட் கோலி செல்வார் என்று நான் நினைக்கவில்லை. அவர் வேகத்தை இழந்து விட்டார் என்று நினைக்கிறேன்”
“அவர் வேகத்தை இழந்து கொஞ்சம் வருடங்களாகி விட்டது. எனவே விராட் கோலி அதை அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளில் திருப்ப வேண்டும். இல்லையென்றால் அவர் இன்னும் சரிவை சந்திப்பார். 146 போட்டிகளில் ஜோ ரூட் 12000 ரன்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் கிட்டத்தட்ட 16,000 ரன்கள் அடித்துள்ளார்”
இதையும் படிங்க: கோலி, ரோஹித் மட்டும் ஒசத்தியா? பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டை காயப்படுத்திட்டாங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்
“அதை தொடுவதற்கு இன்னும் 66 போட்டிகளில் 4000 ரன்கள் அடிக்க வேண்டும். எனவே ஜோ ரூட் அந்த சாதனையை நெருங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். சச்சினின் அந்த சாதனையை ரூட் உடைப்பாரா என்று நாம் பார்க்க வேண்டும். அந்த தனித்துவமான சாதனையை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனதில் இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.