ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி மழை காரணமாக இரண்டரை நாட்கள் நடைபெறாத நிலையில் கடைசி இரண்டு நாட்களில் இந்திய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.
ரோஹித் சர்மா அசத்தலான கேப்டன் :
போட்டியில் நான்காம் நாள் வங்கதேச அணியை 233 ரன்களில் சுருட்டிய இந்திய அணி அதனைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 34.4 ஓவர்களில் 285 ரன்கள் குவித்து 52 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வங்கதேச அணியை சொற்ப ரன்களில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டி இருந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாடினும் அவரது செயல்பாட்டை பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா கேப்டனாக இருந்து முதலில் வெற்றிகளைப் பெற நினைக்கிறார். மற்றவை எல்லாம் இரண்டாவதாக தான் வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் அவர்கள் பேட்டிங் செய்வதற்கு வலைப்பயிற்சியாக எடுத்துக் கொண்டு மிகச் சுலபமாக அந்த போட்டியை டிராவை நோக்கி கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் ரோகித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் முடிவை எதிர்நோக்கி விளையாடுகிறார். அதன் காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று மனநிலையை உருவாக்கி முதலில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வைத்தார்.
இந்திய அணியின் அந்த பாசிட்டிவ் இன்டன்ட் தான் அந்த போட்டியில் வெற்றி பெற காரணம். ஒரு கேப்டனாக அவர் நினைத்திருந்தால் அந்தப் போட்டியை எளிதாக டிரா செய்திருக்க முடியும். ஆனால் அவர் வெற்றியை நோக்கி ஓடியதாக பிராட் ஹாடின் கூறியிருந்தார். அதேபோன்று இந்த இரண்டாவது போட்டியில் முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் போட்டியில் 2, 1/2 நாட்களை இழந்ததும் விரைவில் வங்கதேச அணியை வீழ்த்த முயற்சி செய்தோம்.
இதையும் படிங்க : மகளிர் டி20 உ.கோ 2024: ஆசிய சாம்பியன் இலங்கை பரிதாபம்.. வெறும் 116 வைத்தே மிரட்டிய பாகிஸ்தான்
அதேபோன்று பேட்டிங்கில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க நினைத்தோம். அந்த வகையிலேயே எவ்வளவு ஓவர்கள் இருக்கிறது என்பது பற்றி தெரிந்து அதற்கு ஏற்றார் போல் அதிரடியாக விளையாடினோம். அந்த ஆடுகளத்தில் அப்படி ஒரு ஆட்டத்தை விளையாடுவது என்பது எளிதான விடயம் அல்ல. நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறோம். எங்களது வீரர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த போட்டியை வெற்றியில் முடித்திருக்கிறார்கள் என்றும் ரோஹித் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



