ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டதை நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய ஸ்ரேயாஸ் ஐயர் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அதனால் இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்களும் விமர்சித்தார்கள்.
கோபப்பட்ட காவஸ்கர்:
குறிப்பாக ஏபி டீ வில்லியர்ஸ், மான்டி பனேசர், ப்ராட் ஹாட்டின் போன்ற வெளிநாட்டுக்கு முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதைப் பார்த்த சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட்டில் 0% பங்குதாரர்களாக இருக்கும் வெளிநாட்டவர்கள் இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது வேடிக்கையாக இருப்பதாக கூறினார். ஏனெனில் வெளிநாட்டவர்கள் இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமையும் என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவது உங்களுடைய வேலை கிடையாது என்றும் கவாஸ்கர் வெளிநாட்டு வீரர்களை சாடினார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரைப் பற்றிய உண்மையை சொன்னதற்கு கவாஸ்கர் இப்படி கோபித்துக் கொள்ளக்கூடாது என ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக செயல்பட்ட ஹாட்டின் இது பற்றி பேசியது பின்வருமாறு.
உண்மையைத் தானே சொன்னோம்:
“எங்களுடைய நிகழ்ச்சியை கவாஸ்கர் கேட்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. எங்களுடைய நிகழ்ச்சி உலகளவில் செல்லத் துவங்கியுள்ளது. உலக கிரிக்கெட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து எங்களது கருத்தை தெரிவிப்பதே எங்கள் வேலை. அதையே நாங்கள் செய்கிறோம். நாங்கள் ஸ்ரேயாஸ் ஐயரை ஐபிஎல் தொடரில் பயிற்சி செய்தோம். அதனால் அவர் பக்கம் நின்றோம்”
இதையும் படிங்க: ரொம்ப லேட்.. சான்ஸ் கிடைக்காத புஜாரா அப்போவே ரிட்டையராகி போய்ருக்கனும்.. உத்தப்பா ஓப்பன்டாக்
“சிறப்பாக விளையாடியும் அவருக்கு இடம் கிடைக்காதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதே சமயம் மற்ற வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. பஞ்சாப் அணியை சிறப்பாக வழி நடத்திய ஸ்ரேயாஸ் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக விளையாடிய நல்ல கேப்டன். அதனாலேயே அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் ஆம் அவரைப் போன்ற வீரரும் இப்படி ஒதுக்கப்படுவது சகஜமானது” என்று கூறினார்.



