- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துல்லியமான வரலாற்று சாதனை படைத்த நம்ம அஷ்வின் – ஆனாலும் நியாயமின்றி விமர்சிக்கும் முன்னாள் வீரர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக நடைபெறும் இந்த டி20 தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்காவை அனலாக பந்துவீசி மடக்கிய இந்தியா 106/8 ரன்களுக்கு சுருட்டியது. அதை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏமாற்றினாலும் கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடி 51* (56) ரன்களும் சூரியகுமார் யாதவ் மிரட்டலாக செயல்பட்டு 50* (33) ரன்களும் விளாசி வெற்றிபெற வைத்தனர்.

முன்னதாக பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த திருவனந்தபுரம் மைதானத்தில் நெருப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் கேப்டன் பவுமா, டீ காக் உள்ளிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினர். அதனால் 9/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற தென் ஆப்பிரிக்காவின் மானத்தை கேசவ் மகாராஜ் 41, மார்க்ரம் 25 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆட்டநாயகன் விருது வென்ற அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் படேல் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.

அசத்திய அஷ்வின்:
அதே சமயம் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்திய சுழல் பந்து வீச்சு துறையில் அக்சர் படேல் வழக்கம் போல 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்து சிறப்பாக செயல்பட்டார். மேலும் சமீபத்திய போட்டிகளில் முதன்மை சுழல்பந்து வீச்சாளரான சஹால் ரன்களை வாரி வழங்கியதால் அவருக்கு பதில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்றார். அதில் 4 ஓவர்களை முழுமையான வீசிய அவர் விக்கெட் எடுக்காத போதிலும் 1 மெய்டன் உட்பட இதர பவுலர்களை காட்டிலும் 8 ரன்களை மட்டும் கொடுத்து வெறும் 2.00 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசினார்.

ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட அஷ்வின் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்தால் கடந்த டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வாகி கடந்த ஒரு வருடங்களாக இந்தியாவுக்காக விளையாட போராடி வருகிறார். அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட கிடைத்த வாய்ப்புகளில் அசத்தும் காரணத்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளார். ஆனாலும் துல்லியமாக பந்து வீசும் அவர் விக்கெட் எடுக்கும் பவுலராக இருப்பதில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

நியாயமற்ற விமர்சனம்:
தற்போது அதே கருத்தை முன்வைத்து மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அஷ்வினை விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் தன்னுடைய 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இது பார்ப்பதற்கு சிறந்த பந்து வீச்சாக தெரியும். ஆனால் என்னை பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் குறிப்பாக ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். எதிர்ப்புறம் விக்கெட்டுகள் வரும்போது மட்டுமே இந்த மாதிரியான தடுப்பாட்ட பவுலிங் கைகொடுக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் அவருடைய பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

ஆனால் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் ஒரு பவுலர் கடினமாக உழைத்து கொடுக்கும் அழுத்தத்தால் மற்றொரு பவுலர் விக்கெட்டுகள் விக்கெட்டுகளை அள்ளுவார்கள். அந்த வகையில் ஒருபுறம் ரன்கள் கொடுக்காமல் அஷ்வின் பந்து வீசுவதால் ஏற்படும் அழுத்தமே மற்றொருபுறம் இந்தியாவுக்கு இதர பந்து வீச்சாளர்களின் கையில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கிறது. எனவே அஷ்வின் சிறப்பாக செயல்படும் போதிலும் இதுபோன்ற முன்னாள் வீரர்கள் நியாயமின்றி விமர்சிப்பதாக தமிழக ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் திருவனந்தபுரம் போட்டியில் 8 ரன்களை மட்டுமே கொடுத்த அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 4 முழுமையான ஓவர்களை வீசி குறைவான ரன்களை கொடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற தனது சொந்த சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 8, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2022*
2. ரவிச்சந்திரன் அஷ்வின் : 8, இலங்கைக்கு எதிராக, 2016
3. ரவீந்திர ஜடேஜா: 9, இங்கிலாந்துக்கு எதிராக, 2011

- Advertisement -
Published by