தமிழகத்தில் பிறந்து, சிஎஸ்கே நெட் பவுலராகி டி20 உ.கோ’யில் ஹாட்ரிக் – யார் இந்த கார்த்திக் மெய்யப்பன், அறியாத 5 பின்னணிகள் இதோ

Karthik Meiyappan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் அக்டோபர் 18ஆம் தேதியன்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அதிகபட்சமாக தொடக்க வீரர் நிசாங்கா 74 (60) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152/8 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய அமீரகம் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் வெறும் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை முதல் போட்டியில் நமீபியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து சூப்பர் 12 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

ஆனால் அப்போட்டியில் 180 ரன்கள் தொட வேண்டிய இலங்கையை 15வது ஓவரில் ராஜபக்சா 5, அசலங்கா 0, கேப்டன் தசுன் சனாக்கா 0 என அடுத்தடுத்த 3 பந்துகளில் 3 முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி ஹாட்ரிக் எடுத்த அமீரக பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் 152 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார். அதைவிட டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த முதல் அமீரக பவுலராக சாதனை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 5வது பந்து வீச்சாளராக வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

5 அறியாத பின்னணிகள்:
இருப்பினும் பழனியப்பன் கார்த்திக் மெய்யப்பன் என்ற முழுமையான பெயரைக் கேட்கும் போதே அவர் மீது தமிழ்நாட்டு மனம் வீசும் நிலையில் அவரைப் பற்றிய 5 பின்னணிகளை பார்ப்போம்:

5. நம்ம ஊரு பையன்: அமீரக அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இவரும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 2000 அக்டோபர் 8ஆம் தேதி பிறந்தார். இருப்பினும் கடந்த 2012ஆம் ஆண்டு அவரது குடும்பம் துபாய்க்கு குடி பெயர்ந்ததால் அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2019இல் அமீரக அண்டர்-19 அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் தற்போது சீனியர் அளவில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளராக பிறந்த நாட்டுக்கும் வளர்ந்த நாட்டுக்கும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. ஆர்சிபியில் மெய்யப்பன்: கடந்த 2020 ஐபிஎல் சீசன் கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அப்போது விராட் கோலி கேப்டனாக இருந்த பெங்களூரு அணி நிர்வாகம் இவரையும் அப்போதைய அமீரக அணியின் கேப்டனாக இருந்த அஹமத் ராஜாவையும் நெட் பந்து வீச்சாளர்களாக அழைத்தது. அப்போது 20 வயதான கார்த்திக் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பையும் சஹால், ஆடம் ஜாம்பா போன்ற நட்சத்திரங்களுடன் பந்து வீசும் வாய்ப்பையும் பெற்று தனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டார்.

3. தோனியுடன் மெய்யப்பன்: அதே போல ஐபிஎல் 2021 சீசனின் 2வது பாகம் துபாயில் நடைபெற்றது. அந்த தொடரில் இவரது திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய நெட் பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்தது. அதனால் தோனி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராகப் பந்து வீசும் பொன்னான வாய்ப்பை பெற்ற மெய்யப்பன் அனுபவத்தை மேலும் வளர்த்துக் கொண்டார்.

- Advertisement -

4. ஆரம்பமே அமர்க்களம்: அப்படி ஐபிஎல் தொடரில் நெட் பந்து வீச்சாளராக அனுபவத்தைப் பெற்றதால் கடந்த 2021 அக்டோபர் 8ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய மெய்யப்பன் வெறும் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் தன்னுடைய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்று வருங்கால நட்சத்திரமாக தன்னை அப்போது அடையாளப்படுத்தினார்.

5. ஐபிஎல் கனவு: அதற்கு முன்பாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றிய அவர் வரும் காலங்களில் ஏதேனும் ஒரு அணியில் முதன்மை பந்து வீச்சாளராக விளையாட விரும்புவதாக 2020ஆம் ஆண்டு கொடுத்த பேட்டியில் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது வேகத்துக்கு சாதகமாகவும் சுழலுக்கு சவாலும் கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ள அவரை நிச்சயமாக வரும் ஐபிஎல் தொடர்களில் ஏதேனும் ஒரு அணி வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. அதனால் அவரது கனவு விரைவில் நனவாக வேண்டும் என்பதற்காக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Advertisement