
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 12 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தினை பிடித்து ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. அதனை தொடர்ந்து பெங்களூரு அணி இன்னும் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.
இந்த இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட பெங்களூரு அணி நிச்சயம் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் பலமான நிலையில் இருக்கும். கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத ஆர்.சி.பி அணி இம்முறை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்கள் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே 8-ஆம் தேதி ஐபிஎல் தொடரானது தடைபட்டு ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய வேளையில் இந்தியாவிலிருந்து வெளியேறிய பல வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வர முடியாத சூழல் ஏற்பட்டதால் பல்வேறு அணிகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் ஆர்.சி.பி அணியிலும் முக்கிய வீரர்கள் சிலர் தேசிய பணிகளுக்காக மீண்டும் ஆர்.சி.பி அணிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி எஞ்சியுள்ள இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள வேளையில் அந்த போட்டிக்கு தயாராகும் வகையில் லுங்கி நெகிடி வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஜிம்பாப்வேவை சேர்ந்த 28 வயதான பிளசிங் முசாரபானியை ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள், 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 70 டி20 போட்டிகள் என மூன்று வகையான போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க : கோலி மாதிரி ஃபிட்னெஸ் இல்லாமையே.. ரோஹித் உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேனாக இதான் காரணம்.. மொய்ன் அலி
அதுமட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த டி20 லீக் தொடர்களிலும் விளையாடிய அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 அடி 8 அங்குலம் உடைய அவர் வீசும் பந்துகள் நல்ல வேகத்திலும், உயரத்திலும் செல்லும் என்பதனால் அவரது வருகை ஆர்.சி.பி அணிக்கு பலம் என்றே கூறலாம்.