
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். இருந்தாலும் அவரது அணுகுமுறை பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற போட்டி அவரது வாழ்க்கையே திருப்பிப் போடும் அளவிற்கு இருந்ததை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனெனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் என்கிற டார்கெட்டை துரத்தும் போது 35 பந்தில் சதம் அடித்த அவர் 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 11 சிக்சர் என 101 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன்மூலம் 14 வயதிலேயே ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த முதல்வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அவர் அடித்த அந்த சதம் கிரிக்கெட் உலகையே மிரள வைத்தது. அந்த அளவிற்கு அவரது பேட்டிங்கில் அதிரடி தென்பட்டது. இப்படி ஒரு 14 வயது வீரர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தியது பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அவர்களது வாயாலே பாராட்டவும் வைத்தது.
தற்போது 14 வயதாகும் சூரியவன்ஷி எதிர்காலத்தில் இந்திய அணிக்காக பல ஆண்டுகாலம் நிலைத்து நின்று விளையாடக் கூடிய அளவு திறமை உடையவர் என்று பலரும் பாராட்டு துவங்கியுள்ளனர். இந்நிலையில் பீகார் மாநில அணியில் வைபவ் சூரியவன்ஷிக்கு கேப்டனாக இருந்த அஷுதோஷ் அமன் என்கிறவர் அளித்துள்ள பேட்டி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சூரியவன்ஷி குறித்து பேசிய அவர் கூறுகையில் :
நான் வைபவ விளையாடிய போட்டிகளை சற்று பதற்றத்துடன் தான் பார்த்தேன். ஏற்கனவே பீஹார் அணிக்காக அவர் விளையாடும் போது நான் அவரின் திறமையை பார்த்திருக்கிறேன். அப்போதே அவர் பெரிய பெரிய சிக்சர்களை அடித்து அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவார். ஆனால் ஐபிஎல் தொடரின் போது அந்த அழுத்தத்திற்கு மத்தியில் எவ்வாறு செயல்படுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் அசத்தலாக செயல்பட்டு எங்கள் மாநில அணிக்கே பெருமை சேர்த்து விட்டார். வைபவ் அடித்த சிக்சர்களை பார்க்கும்போது நான் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். ஏனெனில் அவர் இப்படி விளையாடும் போது நிச்சயம் இனி பீஹார் கிரிக்கெட் வீரர்கள் பலராலும் கவனிக்கப்படுவார்கள். ஜார்கண்ட் அணிக்காக முதன் முதலாக பெரிய வீரராக தோனி உருவெடுத்தார்.
இதையும் படிங்க : லவ் யூ சாம்பியன்.. நிரூபிக்க ஒன்னுமில்ல.. எல்லாமே சாதிச்ச தோனி இதை செய்யனும்.. ஓய்வு குறித்து கில்கிறிஸ்ட்
தோனி வந்ததுக்கு பிறகு தான் ஜார்கண்ட் என்கிற ஒரு அணியே வெளியில் தெரிய ஆரம்பித்தது. அதேபோன்று தற்போது சூரியவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பீஹார் கிரிக்கெட்டை வெளிக்கொண்டு வந்துள்ளார். இனியும் அவர் பீகார் மாநில கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பெருமையை சேர்ப்பார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.