இந்தியாவுக்கு கோப்பை கஷ்டம் தான், இனியாவது பும்ரா அந்த முடிவை எடுக்கணும் – பாக் வீரர் கோரிக்கை

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே இந்த வருடம் அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற பெரும்பாலான தொடர்களில் ஓய்வெடுத்து பணிச்சுமையை நிர்வகித்து வந்த அவர் திருவனந்தபுரத்தில் வலை பயிற்சியின் போது முதுகுப் பகுதியில் சந்தித்த காயத்தால் முதல் டி20 போட்டியில் களமிறங்கவில்லை.

IND Japrit Bumrah

- Advertisement -

இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2வது போட்டியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்துள்ள இந்த செய்தி இந்திய அணிக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த பும்ரா ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து வருகிறார்.

குறிப்பாக தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை பெற்றுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் கச்சிதமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். அதிலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க துடிக்கும் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி போட்டியை தலைகீழாக மாற்றி வெற்றியை பெற்றுக் கொடுப்பவராக கருதப்படும் அவர் காயத்தால் விலகியது இந்தியாவின் உலக கோப்பை கனவையும் தகர்த்துள்ளது என்றே கூறலாம்.

Bumrah

கோப்பை கஷ்டம் தான்:
ஏனென்றால் அவரைத் தவிர உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் 120 – 130 கி.மீ வேகத்தில் மட்டும் பந்து வீசுவதுடன் கடைசி கட்ட ஓவர்களில் வள்ளலாக ரன்களை வாரி வழங்கி வருவதை சமீபத்திய போட்டிகளில் பார்த்தோம். அதனால் 140 கி.மீ வேகத்தில் பந்து வீசினால் மட்டுமே சமாளிக்கக்கூடிய ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய சாம்பியன் பவுலரான ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் காயத்தை ஏற்படுத்தக் கூடிய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள பும்ரா ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் விடை பெற்றால் மட்டுமே கடைசி வரை வெற்றிகரமாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசும் போது அதிகப்படியான அழுத்தத்தை உள்வாங்குகிறார். ஏனெனில் அவருடைய பந்துவீச்சு ஆக்சன் அப்படி உள்ளது. 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் அவர் ஐபிஎல் போன்ற பெரிய தொடரிலும் விளையாடுகிறார். எனவே குறிப்பிட்ட வகையான கிரிக்கெட்டை மட்டும் அவர் தேர்வு செய்ய வேண்டும்”

Butt

“ஏனெனில் ஃபெராரி மற்றும் ஆஸ்டின் மார்ட்டின் போன்ற சூப்பர் கார்கள் வார இறுதி நாட்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை டொயோட்டா கொரோல்லா போல அனைத்து நாட்களிலும் பயன்படுத்த முடியாது. தற்போது அவர் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். குறிப்பாக முன்னேற்றங்கள் தேவைப்படுகின்ற இந்திய பந்துவீச்சு துறையை பலப்படுத்த அவர் தேவைப்படுகிறார். ஏராளமான அனுபவம் கொண்டுள்ள அவர் முழுமையான பந்துவீச்சாளர். ஏனெனில் அவர் மெதுவான பந்துகள் முதல் யார்க்கர் வரை அனைத்து பந்துகளையும் துல்லியமாக வீசும் திறமை பெற்றுள்ளார்”

- Advertisement -

“அதுபோக விக்கெட் எடுக்கும் பவுலரான அவர் குறைவான ரன்களை கொடுக்கக் கூடியவர். மேலும் டெத் ஓவர்களில் அற்புதமாக செயல்படக் கூடியவர். போட்டியின் அனைத்து நேரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அந்த வகையில் பும்ரா இல்லாதது நிச்சயம் இந்தியாவிற்கு வலியை கொடுக்கப் போகிறது. இருப்பினும் இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்த வேண்டும். காயத்திலிருந்து குணமடைந்தது பும்ரா திரும்பி விடுவார். ஆனால் அதுவரை அவருடைய இடத்தை நிரப்பப் போவது யார்? என்பதே முதல் கேள்வியாகும்”

இதையும் படிங்க : போகட்டும் விடுங்க, மும்பைக்கு மட்டும் விளையாடட்டும் – பும்ரா காயம் பற்றி ஆதாரத்துடன் ரசிகர்கள் பேச்சு

“பாகிஸ்தான் அணியிலும் சாஹீன் அப்ரிடி விலகிய போது இதே நிலைமை ஏற்பட்டது. அப்போது வாய்ப்பு பெற்ற நஷீம் ஷா அதை முழுமையாக இருகரம் கொண்டு பிடித்துக் கொண்டார். அதே போல் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தில் வாய்ப்பு பெறும் பவுலர் அதை ஆசிர்வாதத்துடன் இறுக்கமாக பிடித்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement