
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுதவிர்த்து கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 190 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்காத புவனேஷ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு இடம் பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். தற்போது 35 வயதான அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதினால் எப்போது வேண்டுமானாலும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால் புவனேஷ்வர் குமார் தற்போது வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் : தான் இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது என்றும் தற்போதைக்கு ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
நான் என்னுடைய பந்துவீச்சை மிகவும் ரசித்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இதுவரை எனக்கு வந்தது கிடையாது. எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ அவ்வளவு நாட்கள் விளையாட முயற்சிப்பேன். மற்றவைகள் தேர்வாளர்கள் கைகளில் தான் உள்ளது என புவனேஷ்வர் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த புவனேஷ்வர் குமார் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 10 மாசத்துக்கு 10 மேட்ச்.. விராட், ரோஹித் 2027 உ.கோ வாய்ப்பை நெனைச்சா கவலையா இருக்கு.. ஆகாஷ் சோப்ரா
தற்போது 35 வயதாகும் புவனேஷ்வர் குமார் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்றாலும் ஐ.பி.எல் தொடர்களில் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்பது உறுதி.