இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறாத அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்போது 39, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபிட்னெஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.
எனவே 2027 உலகக் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான புதிய இளம் அணியை களமிறக்க தேர்வுக்குழுவினர் விரும்புவதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு ஏதுவாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அந்த செய்திகள் உண்மையல்ல என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா சமீபத்தில் மறுத்திருந்தார்.
10 மாதத்தில் 10 போட்டிகள்:
உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட், ரோஹித் தொடர்ந்து விளையாட விரும்பினார்கள். ஆனால் அவர்களை கழற்றி விட்ட பிசிசிஐ இங்கிலாந்தில் கில் தலைமையிலான புதிய அணியை களமிறக்கியது. இந்நிலையில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விராட், ரோஹித் இனிமேல் 10 மாதங்களில் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதனால் தொடர்ச்சியாக விளையாடி தங்களை நல்ல ஃபார்மில் வைத்துக் கொள்வது அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கவலைத் தெரிவித்துள்ளார். எனவே 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவார்கள் என்பதை 100% உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு. “அவர்கள் இருவரும் உலகக்கோப்பையை நோக்கி தங்களை தள்ளலாம்”
2027 உலகக் கோப்பை வாய்ப்பு:
“2027 உலகக் கோப்பை தெனாப்பிரிக்காவில் நடைபெறுவதால் அங்கே உங்களுக்கு அனுபவம் மற்றும் திறன் தேவை. ஆனால் அதற்கு நீண்ட பாலம் காத்திருக்கிறது. அந்த உலகக் கோப்பையில் விளையாட அவர்கள் இருவருக்குமே நிதர்சனமான வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் அவர்கள் இங்கிருந்து குறைவான கிரிக்கெட்டை விளையாடப் போகிறார்கள் என்பதை நான் விரும்பவில்லை”
இதையும் படிங்க: 8வது இடத்தில் திணறும் இங்கிலாந்து.. நேர்மைக்கு எதிரானதான்னு ஐசிசி பாக்கனும்.. மைக்கேல் வாகனை கலாய்த்த ஜாபர்
“ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்பு வேண்டுமெனில் அவர்கள் நிறைய கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்று நான் கருதுகிறேன். ஒருவேளை அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் நிறைய கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆனால் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏன் ஓய்வு பெற்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்ற அவர்கள் 2 மாதம் ஐபிஎல் தொடரில் விளையாடிட்டு பின்னர் 10 மாதங்களில் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடப் போகிறார்கள். தனிப்பட்ட முறையில் அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கூறினார்.



