- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பவர்பிளேவை தாண்டிட்டா இவரை விட ஒரு டேஞ்சர் பேட்ஸ்மேன் யாரும் கிடையாது – ஆட்டநாயகன் புவி ஓபன்டாக்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய இந்திய அணி தங்களது சிறப்பான பேட்டிங் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது.

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியானது 17 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்களை மட்டுமே அடித்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவதாக பவுலிங் செய்யும்போது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் தனது அருமையான பந்துவீச்சை இந்த போட்டி முழுவதுமே வெளிப்படுத்தினார். எப்பொழுதுமே புதிய பந்தினை ஸ்விங் செய்வதில் கெட்டிக்காரரான புவனேஸ்வர் குமார் இந்த போட்டியில் தனது அற்புதமான ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பவர்பிளே ஓவர்களில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும், அதிக டாட் பால்களை வீசிய வீரராகவும் இருந்து வரும் புவனேஸ்வர் குமார் இந்த போட்டியிலும் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டுடன் ஆரம்பித்து மெய்டன் ஓவராக வீசினார். இந்த போட்டியின் முடிவில் மூன்று ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதிலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லருடைய விக்கெட்டை அவர் வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து அவருக்கு ஆட்டநாயகன் விருந்து வழங்கப்பட்ட வேளையில் தனது இந்த சிறப்பான பவுலிங் குறித்து பேசியிருந்த புவனேஸ்வர் குமார் கூறுகையில் : பந்து ஒரு மைதானத்தில் நன்றாக ஸ்விங் ஆகும்போது ஒரு பவுலராக நமக்கு பந்துவீச அதிகஅளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கிலாந்து மைதானங்களில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு நன்றாக பவுலர்களுக்கு ஒத்துழைக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் இங்கு நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பந்துவீசி வருகிறேன். குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் பட்லர் விக்கெட்டை வீழ்த்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் அவர் ஒரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன். பவர் பிளே ஓவர்களை தாண்டிவிட்டால் அவர் நிச்சயமாக பெரிய ஸ்கோர் அடிப்பார் அதை யாராலும் தடுக்க முடியாது. அவரை ஆரம்பத்திலேயே வீழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs ENG : அவங்க மேல எந்த தப்பும் இல்ல. இந்த மோசமான தோல்விக்கு இதுதான் காரணம் – பட்லர் வருத்தம்

ஒருமுறை நாம் பந்துவீசும் போது பந்து ஸ்விங் ஆகி நம்மை உற்சாகப்படுத்தினால் தானாக நம்மால் சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே நான் சிறப்பாக பந்து வீசி வருவது எனக்கு நல்ல உத்வேகத்தை அளித்துள்ளது என புவனேஷ்வர் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by