IND vs PAK : அன்றும் இன்றும் பாகிஸ்தானை தெறிக்கவிடும் புவி – 3 புதிய ஆல் டைம் சாதனைகள், ரசிகர்கள் பாராட்டு

Bhuvaneswar Kumar
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஆசிய கோப்பையில் உலக அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முதுகெலும்பாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் ஆரம்பத்திலேயே புவனேஸ்வர் குமாரிடம் 10 (9) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த பகார் ஜமான் 10 (6) இப்திகார் அஹமத் 28 (22) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் போராடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும் 43 (42) ரன்களில் அவுட்டானார்.

போதாகுறைக்கு மிடில் ஆர்டரில் சடாப் கான் 10, குஷ்தில் ஷா 2, ஆசிப் அலி 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற இறுதியில் ஹாரீஸ் ரவூப் 13* (7) ரன்களையும் தஹனி 16 (6) ரன்களையும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். ஆனால் 20 ஓவர்கள் தாக்குபிடிக்க முடியாத அந்த அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

போராடி வெற்றி:
அதன்பின் 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள். அதில் ரோகித் சர்மா 12 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் போராடிக்கொண்டிருந்த விராட் கோலியும் 35 (34) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் அதிரடி காட்டுவார் என்று கருதப்பட்ட சூரியகுமார் யாதவும் 18 (18) ரன்களில் அவுட்டானதால் இந்தியா பெரிய பின்னடைவை சந்தித்தது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – ஹர்திக் பாண்டியா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு வெற்றியை தீர்மானிக்கும் 52 ரன்கள் நங்கூரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரசிகர்களை நிம்மதியடைய வைத்தனர். அதில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் நிதானமாக விளையாடிய ஜடேஜா கடைசி ஓவரில் 35 (29) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு மீண்டும் ஏற்பட்டது. ஆனால் அந்த அழுத்தத்திற்கு அஞ்சாமல் மறுபுறம் நின்ற ஹர்டிக் பாண்டியா 4 பவுண்டரிகளையும் கடைசி ஓவரில் மெகா சிக்சரையும் பறக்கவிட்டு 33* (17) ரன்களை விளாசி பினிசிங் கொடுத்தார்.

- Advertisement -

தரமான புவி:
அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை பழிதீர்த்துக் கொண்டது. இந்த வெற்றிக்கு ஆல்-ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் பந்துவீச்சில் 4 ஓவரில் 26 ரன்களை மட்டும் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த புவனேஸ்வர் குமார் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

அதிலும் பாகிஸ்தானின் முதுகெலும்பான கேப்டன் பாபர் அசாமை ஆரம்பத்திலேயே சாய்த்து இந்தியாவை முன்னிலைப்படுத்திய அவர் சடாப் கானை மிடில் ஆர்டரில் ரன்களை சேர்க்க விடாமல் ஆசிப் அலி, நசீம் ஷா ஆகியோரை 19வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்தார். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ள அவர் சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்து ஆல் டைம் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. புவனேஸ்வர் குமார் : 4/26*, 2022
2. ஹர்திக் பாண்டியா : 3/8, 2016
3. புவனேஸ்வர் குமார் : 3/9, 2012
4. இர்பான் பதான் : 3/16, 2007

- Advertisement -

2. மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2வது பவுலர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் முகமது ஆசிப் (4/18, 2007இல்) உள்ளார்.

3. அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 9
2. ஹர்திக் பாண்டியா : 7
3. இர்பான் பதான் : 6

4. அத்துடன் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலும் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்திருந்த அவர் ஒரு காலண்டர் வருடத்தில் 2 முறை 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பொதுவாகவே துல்லியம் தரத்திற்கு பெயர்போன புவனேஸ்வர் குமார் கடந்த 2012இல் இதே பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் இந்தியாவுக்காக முதல் முறையாக அறிமுகமானார். அந்த முதல் போட்டியிலேயே ஸ்விங், வேகம் போன்ற அம்சங்களால் பாகிஸ்தானை மிரட்டிய அவர் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். அப்படி அன்றும் இன்றும் மாறாமல் பாகிஸ்தானை அலற விடும் அவர் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

Advertisement