
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த அவர் முத்தையா முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர்நாயகன் விருதுகளை பெற்றுள்ளார். 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்க அஸ்வின் முக்கிய பங்காற்றினார்.
அப்படிப்பட்ட அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காததால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் அமைதியுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் 10 வருடத்திற்கு மேலாக ஜடேஜாவுக்காக வெளிநாடுகளில் தமக்கு வாய்ப்பு கிடைக்காததை அஸ்வின் நட்புக்காக பொறுத்துக் கொண்டதாக முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
ஆனால் புதிய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் அஸ்வினை நம்பாமல் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்து அவமானப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். அதுவே அஸ்வினுடைய ஓய்வுக்கு காரணம் என்றும் அருண் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி பத்ரிநாத் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“தொடரின் முதல் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரருக்காக அஸ்வின் போன்ற பெரிய நட்சத்திரம் புறக்கணிக்கப்பட்டார். அது அஸ்வினுக்கு வழியை கொடுத்திருக்கலாம். கடந்த காலங்களில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா விளையாடினார். ஆனால் அது அஸ்வினுக்கு பெரிய பாதிப்பை கொடுத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை”
“ஆனால் தற்போது சுந்தர் போன்ற ஒருவருக்காக அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அஸ்வினை விட பேட்டிங்கில் அதிக திறன் கொண்ட ஜடேஜா இடது கை பேட்ஸ்மேனாகவும் உள்ளார். சொல்லப்போனால் அதனாலேயே நான் பயிற்சியாளராக இருந்த போது ஜடேஜாவுக்காக உங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்று அஸ்வினிடம் பேசி புரிய வைத்தேன். அதை அஸ்வினும் நன்றாக எடுத்துக் கொண்டார்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 எப்போது துவங்குகிறது? சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணி எப்போது வெளியாகும்? ராஜிவ் சுக்லா அறிவிப்பு
“ஆனால் தற்போது இவ்வளவு உச்சகட்ட கிரிக்கெட்டை விளையாடியும் தொடரின் துவக்கத்திலேயே அவரை நீக்கிய நீங்கள் இரண்டாவது போட்டியில் தேர்ந்தெடுத்து மூன்றாவது போட்டியில் மீண்டும் நீக்கினீர்கள். அந்த அடுத்தடுத்து முடிவுகள் தான் நாம் விடை பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று அஸ்வினை உணர வைத்து ஓய்வை அறிவிக்க வைத்திருக்கலாம்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.