பும்ரா 5 போட்டியிலும் விளையாடும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு.. ஐடியா குடுத்த பரத் அருண் – விவரம் இதோ

Bharat Arun
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் முதன்மை வீரராக செயல்பட்டு வருகிறார். ஆண்டுதோறும் நிறைய போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாடுவதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவ்வப்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவருக்கு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

5 போட்டிகளிலும் பும்ரா விளையாட வழி இருக்கு : பரத் அருண்

ஏற்கனவே பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் : இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்றும் மூன்று போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என்றும் கூறியிருந்தார். அப்படி பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றால் அதற்கு தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பவுலிங் கோச் பரத் அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் போட்டிகளின் போது அதிகமாக பந்து வீசுவதும், குறைவாக பந்து வீசுவதும் காயங்களை ஏற்படுத்தும். சில பந்துவீச்சாளர்கள் காயம் அடைவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன்.

பொதுவாகவே டெஸ்ட் போட்டிகளில் பும்ரா எத்தனை ஓவர்களை வீசப்போகிறார் என்பதை நம்மால் கூற முடியாது. ஆனால் போட்டியில் அவர் வீசும் ஓவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அவருக்கான பயிற்சி அமர்வுகளை மாற்றியமைக்க முடியும். அதோடு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, பிசியோக்களுடன் வேலை செய்வது என அனைத்திற்கும் பும்ராவிற்கான நேரத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும். அவரது பணிச்சுமையை நிர்ணயிக்க வேண்டியது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால்.

- Advertisement -

ஒருவேளை பும்ரா 5 போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றால் அவரை சுற்றி விளையாடும் மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். அப்படி மற்ற பந்துவீச்சாளர்கள் இடமிருந்து விக்கெட் கிடைக்கும் போது அவர் வீசும் ஓவர்களின் எண்ணிக்கை குறையும். அப்படி பும்ராவின் பணிச்சுமை சரியாக அளவிற்குள் இருந்து குறைவான ஓவர்களை அவர் வீசினால் இங்கிலாந்து தொடரின் 5 டெஸ்ட் போட்டிகளிலும் அவரை விளையாட வைக்க முடியும்.

இதையும் படிங்க : தோனி மட்டும் அந்த முடிவை எடுத்தா அது சி.எஸ்.கே அணிக்கு மிகப்பெரிய இழப்பு – மைக்கல் கிளார்க் கருத்து

என்னை பொறுத்தவரை பும்ரா இந்திய அணியில் இருப்பது மிகப்பெரிய வலிமையை சேர்க்கிறது. அவர் அணியில் இருந்தால் அவர் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மற்ற பந்துவீச்சாளும் சிறப்பாக செயல்பட அது வழி வகுக்கும் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement