
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா பர்மிங்காமில் முதல் முறையாக வெற்றி சரித்திரம் படைத்தது.
3வது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் விளையாட வந்த காரணத்தால் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைப் போராடி வீழ்த்திய இங்கிலாந்து 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அப்போட்டியில் 3வது நாள் மாலையில் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார்.
அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் கில் சில மோசமான வார்த்தைகளை சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்தார். கடைசியில் அதுவே இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்து தங்களுடைய வெற்றிக்கு பங்காற்றியதாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் தங்களுடைய ஒரு வீரரை சீண்டினால் 11 இங்கிலாந்து வீரர்கள் சேர்ந்து வந்து இந்தியாவுக்கு திருப்பி கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் கடந்தப் போட்டியை போல இந்தியா ஏதேனும் வம்பிழுத்தால் பின்னங்கால் வைக்காமல் பதிலடி கொடுப்போம் என்று பென் ஸ்டோக்ஸ் மீண்டும் எச்சரித்துள்ளார். இது பற்றி நான்காவது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் களத்திற்கு சென்று ஸ்லெட்ஜிங்கை துவங்க வேண்டும் என்பது தேவையற்றது. இரு அணிகளுமே அதை செய்ய விரும்புமென்று நான் நினைக்கவில்லை”
“இது போன்ற பெரிய தொடரில் 2 அணிகளுக்கும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே ஏதேனும் ஒரு தருணத்தில் அது போன்ற சூடான நிகழ்வுகள் அரங்கேறும். இருப்பினும் நாங்கள் களத்தில் வேண்டுமென்றே எதிரணியிடம் எதையும் செய்ய மாட்டோம். களத்தில் எங்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்துவோம்”
இதையும் படிங்க: 240 ஸ்ட்ரைக் ரேட்.. கடைசி போட்டியில் ஸ்கீரினை கிழித்த ரசல்.. 2 கெளரவத்துடன் பிரியா மனதுடன் ஓய்வு
“ஆனால் அதற்காக எந்த எதிரணியும் எங்கள் மீது மோத வரும் போது நாங்கள் பின்னங்கால் வைப்போம் என்று அர்த்தமல்ல. நாங்கள் திருப்பிக் கொடுக்க முயற்சிக்காமல் இருக்க மாட்டோம். உண்மையில் இது பெரும்பாலான அணிகளுக்கு பொருந்தும் என்பதால் நாங்கள் மட்டும் செய்வதில்லை. இந்தத் தொடரில் அனைத்து போட்டிகளும் 5வது நாள் செல்வதால் மிகவும் தரமானதாக இருந்து வருகிறது” என்று கூறினார்.