இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் ஒருமுறை இந்த தொடரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்திய அணியை வீழ்த்த அவரே காரணம் : பென் ஸ்டோக்ஸ்
இதன் மூலம் மூன்று போட்டிகளின் முடிவில் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இரு அணிகளும் 387 ரன்களை குவித்தனர்.
பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 192 ரன்களை குவித்ததால் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு சிறியதாக இருந்தாலும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 170 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. கடைசி நாள் காலை நானும் ஆர்ச்சரும் பந்துவீச வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஜோப்ரா ஆர்ச்சரால் இந்த கடைசி நாளில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று என்னுடைய உள்ளுணர்வு சொன்னது.
அந்த வகையிலேயே கடைசி நாளின் ஆரம்பத்தில் அவர் வீழ்த்தி கொடுத்த இரண்டு விக்கெட்டுகள் வெற்றியை எங்களது வசம் திரும்ப செய்தது. பிரைடன் கார்ஸ் அற்புதமான பந்துவீச்சு ஃபார்மில் இருந்தாலும் ஜோப்ரா ஆர்ச்சரை விரைவாக கொண்டு வந்தால் மாற்றம் நிகழும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : 27க்கு ஆல் அவுட்.. வெ.இ மோசமான உலக சாதனை.. ஆஸி மிரட்டல் வெற்றி.. போலண்ட் வரலாற்று ஹாட்ரிக் சாதனை
அந்த வகையில் அவரும் சிறப்பாக பந்துவீசி எங்களது அணியின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்ற ஆட்டத்தை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



