இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வரும் அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து கடைசி போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.
அந்தப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராக உள்ளது. அதே போல இங்கிலாந்து வெற்றி பெற்று 3 – 1 என்ற கணக்கில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல தயாராக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடைசிப் போட்டியில் காயத்தால் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டோக்ஸ் விலகல்:
இத்தொடரில் பந்து வீச்சு துறையில் மற்ற இங்கிலாந்து பவுலர்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக 3வது போட்டியிலேயே பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட ஓவர்களை போட்டு இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்தப் போட்டியிலும் சதத்தை அடித்த அவர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் முழுமூச்சுடன் பந்து வீசிய அவர் 4வது நாளில் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்தார். அந்த வலியுடன் தொடர்ந்து 5வது நாளில் பந்து வீசிய அவருடைய வலது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. அதனாலேயே அவர் அந்த போட்டியின் கடைசி நாளில் முழுமையாக பந்து வீசவில்லை. அந்த காயங்களால் தற்போது பென் ஸ்டோக்ஸ் 5வது போட்டியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
4 மாற்றங்கள்:
கடந்த 2 போட்டியில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகள் வென்ற அவர் காயத்தால் விலகியுள்ளது இங்கிலாந்துக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ஓலி போப் 5வது போட்டியில் இங்கிலாந்தை தலைமை தாங்குவார் என்றும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது போக ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், லியம் டாசன் ஆகியோரும் கடைசிப் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்னும் 89 ரன்கள் தான்.. 89 வருட டான் பிராட்மேனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – சுப்மன் கில்
அதில் 4 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ஆர்ச்சர் 2 போட்டியுடன் விலகியுள்ளார். அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பேத்தல், கஸ் அட்கின்ஷன், ஜேமி ஓவர்டன், ஜோஸ் டாங் ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது. இது இந்திய அணிக்கு தொடரை சமன் செய்வதற்காக கிடைத்தப் பொன்னான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.



