விட்டதை பிடிப்பதற்காகவே 11 வருடங்கள் அடிக்காமல் காத்திருந்த பென் ஸ்டோக்ஸ் – ரசிகர்கள் அசறும் புள்ளிவிவரம் இதோ

Ben Stokes ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து வென்று சரித்திரம் படைத்துள்ளது. இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தேவையான வெற்றிகளுடன் ஃபைனலுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தானை நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று டி20 உலக கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை சமன் செய்தது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் சுமாராக செயல்பட்டு 137/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஷான் மசூட் 38 (28) ரன்களை எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரண் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் 1, ப்லிப் சால்ட் 10, கேப்டன் ஜோஸ் பட்லர் 26, ஹரி ப்ரூக் 20, மொய்ன் அலி 19 என முக்கிய வீரர்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் 4வது ஓவரில் களமிறங்கி தரமான பாகிஸ்தான் பந்து வீச்சு கூட்டணி கொடுத்த அழுத்தத்திற்கு அஞ்சாமல் கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 52* (49) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

2016 வைராக்கியம்:
அதனால் 1992இல் இதே மெல்போர்ன் மைதானத்தில் சந்தித்த உலகக்கோப்பை தோல்விக்கு 30 வருடங்கள் கழித்து பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து ஒரே சமயத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் ஆகிய 2 உலகக் கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை படைத்தது. மறுபுறம் 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று தம்பட்டம் அடித்த பாகிஸ்தான் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறியதால் பரிதாப தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகளை எடுத்த சாம் கரண் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் அழுத்தமான மாபெரும் பைனலில் 52* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

முன்னதாக கடந்த 2016 டி20 உலக கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் கார்லஸ் ப்ரத்வெய்ட் அதிரடியில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை கொடுத்து கோப்பையை தாரை வார்த்ததால் மைதானத்திலேயே கண்கலங்கி மண்டியிட்டார். இருப்பினும் அதற்காக துவளாமல் கடினமாக உழைத்த அவர் 2019இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு அதே ஃபைனலில் ஆட்டநாயகன் விருதை வென்று இங்கிலாந்துக்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்தார்.

- Advertisement -

அப்போதே நாயகனாக அவதரித்த அவர் அடுத்த சில மாதங்களில் ஹெண்டிங்லே நகரில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் தனி ஒருவனாக வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆனாலும் மனதில் ஒரு ஓரத்திலேயே இருந்த 2016 வரலாற்றுத் தோல்வியின் வலிக்கு மருந்தாக நேற்றைய போட்டியில் விட்டதை பிடிக்கும் வகையில் அபாரமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அதே கோப்பையை மீண்டும் இங்கிலாந்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் கடந்த 2011இல் இங்கிலாந்துக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 11 வருடங்களாக ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

மேலும் கடந்த 11 வருடங்களில் 35 இன்னிங்ஸ்சில் வெறும் 533 ரன்களை எடுத்து சுமாராவே செயல்பட்டு வந்த அவர் நேற்றைய போட்டியில் தான் முதல் முறையாக தனது டி20 கேரியரில் முதல் அரை சதமடித்து கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதும் இந்த உலகில் தோல்வி என்பது நிரந்தரமில்லை என்பதும் கடினமாக உழைத்தால் தோல்வியும் இறுதியில் அதிர்ஷ்டமாக அமைந்து நாயகனாக அவதரிக்க முடியும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தன்னை பிக் மேட்ச் ப்ளேயர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

Advertisement