Ashes 2023 : அழாதீங்க பால் டப்பா குழந்தையே, வெறித்தனமாக கலாய்த்த ஆஸி பத்திரிகை – பென் ஸ்டோக்ஸ் ரியாக்சன் இதோ

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரின் ஆரம்பத்திலேயே வலுவான முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பாகிஸ்தானை போல உங்களையும் அடிப்போம் என்று வாயில் மட்டும் பேசிய இங்கிலாந்து முக்கிய நேரங்களில் பொறுப்புடன் செயல்படாமல் அனைத்து நேரங்களிலும் அதிரடியாகவே விளையாடி 2 போட்டிகளிலுமே அதீத தன்னம்பிக்கையால் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டு சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதை விட லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் கேமரூன் கிரீன் வீசிய 56வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை அடிக்காமல் குனிந்து விட்ட ஜானி பேர்ஸ்டோ எதைப் பற்றியும் யோசிக்காமல் விக்கெட் கீப்பர் பந்தை முழுமையாக பிடித்து முடிப்பதற்கு முன்பாகவே உடனடியாக வெள்ளை கோட்டை விட்டு வெளியேறினார். அந்த சமயத்தில் மிகவும் விழிப்புடன் இருந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்து ஸ்டம்ப்களில் அடித்து அவரை ரன் அவுட் செய்தது இங்கிலாந்து ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

- Advertisement -

கலாய்த்த பத்திரிகை:
குறிப்பாக விதிமுறைக்குட்பட்டு அவுட் செய்தாலும் “அந்த பந்தை எதிர்கொண்டு முடித்து விட்டேன்” என்பதை காண்பிப்பதற்காக உலகில் அனைத்து பேட்ஸ்மேன்களும் செய்வது போல் தன்னுடைய காலால் வெள்ளைக்கோட்டில் குறியிட்டு விட்டு ஜானி பேர்ஸ்டோ வெளியேறியதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர். சொல்லப்போனால் போட்டி முடிந்த பின் தங்களுடைய பெவிலியின் நோக்கி சென்று கொண்டிருந்த உஸ்மான் கவாஜா போன்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் பெரிய அறையில் கிரிக்கெட்டின் விதிமுறைகளை எழுதும் எம்சிசி அமைப்பின் சில உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அனைவருமே மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது போல கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று விமர்சித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தாங்களாக இருந்தால் அந்த முடிவை திரும்ப பெற்று பேட்ஸ்மேனை மீண்டும் விளையாட அழைத்திருப்போம் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் “ஓகே நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் தாங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பி விமர்சித்து தீர்ப்பதாக இங்கிலாந்தை பிரபல மேற்கு ஆஸ்திரேலியன் பத்திரிக்கை வெளிப்படையாக கலாய்த்துள்ளது. குறிப்பாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தை ஒரு பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து எடிட் செய்து அவருடைய வாயில் பால் டப்பாவை வைத்திருப்பது போல் அந்த பத்திரிக்கை சித்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புதிய பந்தை ஒழுங்காக பிடித்து விளையாட தெரியாமல் ஆஷஸ் கோப்பையை தவற விடாதீர்கள் என்ற வகையில் அந்த பத்திரிக்கையை நிறுவனம் வெறித்தனமாக கலாய்த்துள்ளது.

அதன் உச்சகட்டமாக தங்களுடைய பத்திரிகையின் முதல் பக்கத்தில் “அழும் குழந்தைகள். சீட்டிங் என்ற பெயருடன் சிணுங்குவதை புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது” என்ற தலைப்புடன் தலைப்புச் செய்தியாக அதை போட்டு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை மேற்கு ஆஸ்திரிய பத்திரிக்கை நிறுவனம் வெளிப்படையாகவே கிண்டலடித்துள்ளது. இருப்பினும் அதற்காக அசராத பென் ஸ்டோக்ஸ் “நிச்சயமாக அது நான் இல்லை. எப்போதிலிருந்து நான் புதிய பந்தை வீசத் துவங்கினேன்” என்று பதிலளித்து முதிர்ச்சியுடன் நடந்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:டி20 உலககோப்பையை நாம ஜெயிக்கனும்னா இனிமே அவங்க 2 பேரை கழட்டிவிட்டா தான் முடியும் – பி.சி.சி.ஐ நிர்வாகி கருத்து

முன்னதாக 1890களில் இங்கிலாந்து பத்திரிக்கை இவ்வாறு தங்களது அணியை பகிரங்கமாக விமர்சித்ததே ஆஷஸ் உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் தற்போது தங்களை பகிரங்கமாக கலாய்த்துள்ள ஆஸ்திரேலிய பத்திரிகை மற்றும் அந்த நாட்டுக்கு இந்த செய்தியை உத்வேகமாக வைத்து இங்கிலாந்து பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement