ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.
மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.
Tyagi has a run up like Brett Lee and delivers like Ishant Sharma @rajasthanroyals
— Ben Stokes (@benstokes38) October 6, 2020
இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்த தனது கருத்தினை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்ரான பென் ஸ்டோக்ஸ் அறிமுக பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகியை மிகவும் புகழ்ந்துள்ளார். அதாவது அவர் பந்து வீச ஓடிவரும் விதம் பிரெட் லீ போன்றும் பந்து வீசும் விதம் இஷாந்த் சர்மா ஒன்று இருப்பதாகவும் அவர்கள் இருவரையும் ஒன்றிணைந்த வீரராக இவர் இருக்கிறார் என பென் ஸ்டோக்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
நேற்றைய போட்டியில் அறிமுகமான கார்த்திக் தியாகி தனது முதல் ஓவரிலேயே மும்பை அணியின் அதிரடி துவக்க வீரரான குவிண்டன் டிகாக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேலும் நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசி அவர் 36 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.