
இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. அந்தப் போட்டியில் 3வது இன்னிங்ஸில் இந்தியா 311 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கி 0/2 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது கேப்டன் கில் 103, ராகுல் 90 ரன்கள் அடித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினார்கள். அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவர்களுடைய சதத்தை தடுக்கும் வகையில் ஆட்டத்தை முடித்துக் கொள்ள கை கொடுக்க வந்தார். இருப்பினும் அதற்கு இந்திய கேப்டன் கில் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா மற்றும் சுந்தர் சதத்தை அடித்ததும் இந்தியா ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் சுந்தர் ஜடேஜாவின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் டிக்ளர் செய்ய முயற்சித்த பென் ஸ்டோக்ஸ் மேலே தாம் வைத்திருந்த மரியாதையை இழந்து விட்டதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பென் ஸ்டோக்ஸ் மரியாதையை இழந்து விட்டார். ஏனெனில் ஒரு தருணத்தில் அவர் போட்டியை நிறுத்த விரும்பினார். நாங்கள் ஏன் அதை செய்ய வேண்டும்? உங்களால் இந்தியாவை ஆல் அவுட் செய்ய முடியவில்லை. அதைச் செய்ய உங்களுக்கு கிட்டத்தட்ட 2 நாட்கள் இருந்தது. இருந்தும் உங்களால் வெற்றி காண முடியவில்லை”
“அப்படிப்பட்ட நிலையில் போட்டியை நிறுத்துவதால் அவருக்கு என்ன கிடைக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பவுலிங் செய்தார், சதத்தை அடித்தார். அதனால் அனைவரும் அவரை பாராட்டினார்கள். நீங்கள் மரியாதையை சம்பாதிக்க நிறைய வருடங்கள் தேவைப்படும். ஆனால் அதை இழப்பதற்கு ஒரு தருணம் போதும்”
இதையும் படிங்க: 3 – 1ன்னு இந்தியா தோற்பாங்க.. கைகொடுக்குறீங்களான்னு காலம் சொல்லும்.. மைக்கேல் வாகனுக்கு ஜாபர் பதிலடி
“இன்று அந்த தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் மரியாதையை இழந்தார்” என்று கூறினார். மொத்தத்தில் இளம் இந்திய அணி தோற்காமல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியில் வென்றால் 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்து அசத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.