ENG vs IRE : 3 நாளில் அயர்லாந்தை முடித்த இங்கிலாந்து – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தனித்துவ சாதனை

ENG vs IRE Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. மே 1ஆம் தேதி உலக புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து எதிர்பார்த்ததைப் போலவே இங்கிலாந்தின் அதிரடியான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜேம்ஸ் மேக்கோலம் 36 ரன்களும் குட்டீஸ் கேம்பர் 33 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து எதிர்பார்த்ததை போலவே அயர்லாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 524/4 ரன்களை குவித்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்டைலை பின்பற்றி நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகளை கடந்த வருடம் தோற்கடித்த அந்த அணி இந்த போட்டியில் கத்துக்குட்டியான அயர்லாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கியது.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 56 (45) ரன்கள் எடுக்க மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் சதமடித்து 182 (178) ரன்கள் எடுத்தார். அவர்களை மிஞ்சும் வகையில் 3வது இடத்தில் களமிறங்கி அசத்திய ஓலி போப் இரட்டை சதமடித்து 205 (208) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 56 (59) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அயர்லாந்து 2வது இன்னிங்ஸில் பொறுப்புடன் கடுமையாக போராடியும் 362 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணிக்கு ஹேரி டெக்டர் 51 ரன்களும் லார்கன் டுக்கர் 44 ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் 7வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்க் அடைர் 88 ரன்களும் ஆண்டி மெக்பிரின் 86* ரன்களும் போராடி எடுத்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்காக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பால் ஸ்டெர்லிங் – ஆண்டி பால்பரின் 115* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் பந்து வீச்சில் மீண்டும் அசத்திய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக இளம் வீரர் ஜோஸ் டாங் 5 விக்கெட்டை சாய்த்தார். இறுதியில் வெறும் 11 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 12* (4) ரன்களை விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற வைத்தார்.

அந்த வகையில் ஏற்கனவே 4 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டியில் மூன்றே நாளில் அயர்லாந்தை முடித்த இங்கிலாந்து விரைவில் துவங்கும் ஆஷஸ் தொடருக்கு நாங்கள் தயார் என ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதை விட சமீபத்திய ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணியில் 16.25 என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்டாலும் முழங்கால் காயத்தால் பெஞ்சில் அமர்ந்திருந்த பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் கேப்டனாக விளையாடினாலும் பேட்டிங், பவுலிங் போன்ற எதையுமே செய்யவில்லை.

- Advertisement -

குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் முதன்மை பவுலர்களுமே அயர்லாந்தை மூன்றே நாளில் தோற்கடிப்பதற்கு உதவியதால் 2 இன்னிங்ஸிலும் அவர் ஒரு பந்து கூட வீசவில்லை. அதே போல பேட்டிங் செய்ய களமிறங்காத அவர் ஒரு பந்தை கூட எதிர்ப்பு கொள்ளவில்லை. இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் பேட்டிங், பவுலிங் அல்லது கீப்பிங் என எதுவுமே செய்யாமல் விளையாடிய முதல் கேப்டன் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:WTC Final : பெரிய மேட்ச்ல எப்படி விளையாடனுனு அவருக்கு நல்லா தெரியும். அந்த இந்திய வீரர் ரொம்ப டேஞ்சர் – கேமரூன் கிரீன் பேட்டி

இதற்கு முன் நிறைய போட்டிகளில் காயத்தை சந்தித்ததால் சில கேப்டன்கள் பேட்டிங், பவுலிங் செய்யாமல் வெளியேறியுள்ளனர். ஆனால் இவர் காயத்திலிருந்து தப்பிப்பதற்காக எதுவுமே செய்யாமல் விளையாடி இப்படி ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement