ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் சதமடித்து போராடிய ஸ்டோக்ஸ் – கில்கிறிஸ்ட் 33 வருட சாதனையை தூளாக்கி 2 உலக சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியிலேயே 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடி தைரியமாக டிக்ளர் செய்கிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்குள்ளானது.

அந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியிலும் பொறுப்புடன் செயல்படாத இங்கிலாந்தை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 110, டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் 77 என முக்கிய வீரர்களின் நல்ல ரன் குவிப்பால் 416 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் டாங் மற்றும் ஓலி ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கடுமையாக போராடியும் 325 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

உலக சாதனை போராட்டம்:
அதிகபட்சமாக பென் டூக்கெட் 98 ரன்கள் எடுக்க ஷார்ட் பிட்ச் வலையை விரித்து இங்கிலாந்தை கட்டுப்படுத்திய ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 45/4 என சரிந்த அந்த அணியை காப்பாற்ற போராடிய பென் டூக்கெட் 83 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் அவருடன் 5வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நங்கூரமாகவும் நின்று வெற்றிக்கு போராடினார். குறிப்பாக சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதிரடியாக விளையாடி ரசிகர்களையும் மகிழ்வித்த அவர் 88* ரன்களில் இருந்த போது கேமரூன் கிரீன் வீசிய ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 வெவ்வேறு திசைகளில் அட்டகாசமான சிக்சர்களை பறக்க விட்டு ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் சதமடித்தார்.

- Advertisement -

இருப்பினும் எதிர்ப்புறம் ஜானி பேர்ஸ்டோ சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான நிலையில் மறுபுறம் வெற்றிக்காக தொடர்ந்து போராடிய பென் ஸ்டோக்ஸ் கடைசி நேரத்தில் 9 பவுண்டரி 9 சிக்சருடன் 155 (214) ரன்கள் குவித்து அவுட்டானார். அத்துடன் கதையும் முடிந்தது போல் இங்கிலாந்தை 327 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

1. முன்னதாக இப்போட்டியில் 6வது இடத்தில் களமிறங்கி 155 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 33 வருட சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் : 155, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*
2. ஆடம் கில்கிறிஸ்ட் : 149*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999
3. டேனியல் வெட்டோரி : 140, இலங்கைக்கு எதிராக, 2009

- Advertisement -

2. அதைவிட இந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் ஏற்கனவே 2017இல் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜுக்கு எதிராக இதே போல் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: TNPL 2023 : சேப்பாக் கில்லிடா, குறைந்த இலக்கை வைத்தே – பரிதாப திருச்சியை சுருட்டி வீசி வாழ்வா சாவா போட்டியில் வென்றது எப்படி

3. அத்துடன் இப்போட்டியில் 9 சிக்ஸர்களை விளாசிய அவர் 143 வருட பழமை வாய்ந்த ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் : 33*
2. கெவின் பீட்டர்சன் : 24
3. இயன் போத்தம் : 20
4. ஸ்டீவ் ஸ்மித் : 19

Advertisement