
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதனால் இந்த வருடம் அந்த அணி கோப்பையை வெல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினந்தோறும் தமக்கு இன்ஸ்டாகிராமில் 150 மெசேஜ் வருவதாக ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் கூறியுள்ளார்.
அதாவது 2016 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் மிரட்டலாக விளையாடிய பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு வார்னர் 69, தவான் 28, யுவ்ராஜ் சிங் 38 ரன்கள் எடுத்தனர். அதையும் தாண்டி 147/4 என ஹைதராபாத் தடுமாறிய போது ஷேன் வாட்சனுக்கு எதிராக 117 மீட்டர் சிக்ஸரை பறக்க விட்ட பென் கட்டிங் 39* (15) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.
அவருடைய அதிரடியால் ஹைதெராபாத் 209 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 54, கிறிஸ் கெய்ள் 76 ரன்கள் அடித்து அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தனர். அதனால் பெங்களூரு கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அட்டகாசமாக பவுலிங் செய்த பென் கட்டிங் 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்து கெய்ல் விக்கெட்டை எடுத்தார்.
அத்துடன் ராகுல் விக்கெட்டையும் எடுத்த அவர் திருப்புமுனையை உண்டாக்கினார். அதைப் பயன்படுத்திய ஹைதராபாத் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை முத்தமிட்டது. அந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய பென் கட்டிங் ஆட்டநாயகன் விருது வென்று ஆர்சிபி அணியின் முதல் கோப்பை கனவை தூள் தூளாக்கினார். அதே போல இப்போது பிளே ஆஃப் தகுதி பெற்ற ஏதேனும் ஒரு அணியில் மாற்று வீரராக வந்து ஆர்சிபி கனவை உடைக்குமாறு நிறைய ரசிகர்கள் தமக்கு மெசேஜ் செய்வதாக பென் கட்டிங் கூறியுள்ளார்.
“இன்ஸ்டாகிராமில் இப்போது என்னுடைய இன்பாக்ஸை திறந்தால் தினந்தோறும் 150 மெசேஜ் வந்திருக்கும். அதில் ஐபிஎல் தொடரில் நீங்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் ஏதோ ஒரு அணிக்காக மாற்று வீரராக வந்து விளையாட முடியுமா? என்ற செய்தி இருக்கும். அந்த இரவில் (2016 ஃபைனல்) ஐபிஎல் போன்ற உலகின் பெரிய தொடரில் சாதித்தது அற்புதமானது”
“என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய வாழ்நாள் இலக்காகும். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது எனக்கு ஏமாற்றமாகும். ஆனால் அந்த ஐபிஎல் ஃபைனலில் வெளிப்படுத்திய என்னுடைய செயல்பாடு மற்ற செயல்பாடுகளை விட உச்சமானது என்று மதிப்பிடுவேன்”
இதையும் படிங்க: முகமது ஷமி வெளியே.. சி.எஸ்.கே வீரர் உள்ளே.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்படவுள்ள மாற்றம் – பி.சி.சி.ஐ முடிவு
“ஏதோ ஒரு காரணத்திற்காக சமூக வலைதளங்கள் ஊதப்படுகிறது. அனேகமாக ஹைதராபாத் ரசிகர்களுக்கு முக்கியமாக அமைந்த அந்த இரவிலிருந்து இன்னும் ஆர்சிபி கோப்பையை இல்லாதது காரணமாக இருக்கலாம். காலங்கள் கடந்தாலும் அதுவே என்னுடைய கேரியரின் ஹைலைட்டாக இருக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். அன்றைய நாளில் என்னுடைய ஹீரோவான வாட்சனை அடித்ததற்காக கொஞ்சம் அசவுகரியமாக உணர்கிறேன்” என்று கூறினார்.