இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல டாப் அணிகளில் ஒன்றாக ஜொலித்து வருகிறது. சர்வதேச அரங்கில் எதிரணிக்கு ஈடுகொடுத்து விளையாடி வெற்றிகளைப் பெற இந்திய வீரர்கள் மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்டிருப்பது அவசியமாகிறது. அதை சோதிப்பதற்காக தற்சமயத்தில் பிசிசிஐ யோயோ சோதனையை இந்திய அணிக்கு அவசியமாக வைத்துள்ளது.
இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அந்த சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் “ப்ரோன்கோ” எனப்படும் புதிய பிட்னஸ் சோதனையை இந்திய கிரிக்கெட்டில் பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு ஆண்ட்ரியன் லே ரௌக்ஸ் ஸ்ட்ரென்த் கண்டிஷனிங் பயிற்சியாளராக உள்ளார்.
புதிய சோதனை:
அவர் தான் இந்த புதிய கடினமான ஃபிட்னஸ் சோதனையை இந்திய அணியில் அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த ப்ரோன்கோ டெஸ்ட் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் யோ யோ சோதனையை விட கடினமானது என்று தெரிய வருகிறது.
அந்த சோதனையில் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் என்ற 3 படிநிலைகள் இருக்கின்றன. மேலும் 2 நெடிய ஓட்டம் உட்பட மொத்தமாக அந்த சோதனையில் 1200 மீட்டர் தொடர்ச்சியாக ஓடும் வகையில் 5 வெவ்வேறு படிநிலைகள் இருக்கின்றன. அந்த ஐந்து படிநிலைகளையும் இந்திய வீரர்கள் 6 நிமிடத்திற்குள் முடித்தால் தேர்ச்சியடைந்ததாக கருதப்படுவார்கள்.
அறிமுகப்படுத்தும் பிசிசிஐ:
இந்த புதிய சோதனை சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சிராஜ் தவிர்த்து மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் கொண்டு வரப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் உடற்பயிற்சி கூடத்தைக் காட்டிலும் களத்தில் அதிகமாக நேரம் ஓடுவதை ஸ்ட்ரென்த் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆண்ட்ரியன் விரும்புவதாகவும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: வெள்ள தாடி வந்துட்டா ரிட்டயர்டு ஆயிடுவாரா? விராட் கோலி குறித்து பரவும் வதந்திக்கு – நவ்தீப் சைனி பதிலடி
இந்திய வீரர்களின் ஃபிட்னஸை இன்னும் மெருகேற்றுவதற்காக இந்த புதிய சோதனை கொண்டு வரப்படுகிறது. இந்த சோதனைகள் வழக்கம் போல பெங்களூருவில் இருக்கும் என்சிஏ’வில் நடைபெற உள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் 2 கிலோமீட்டரை 8 நிமிடம் 15 வினாடிகளில் தாண்ட வேண்டும். பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள், ஸ்பின்னர்கள் 8 நிமிடம் 30 வினாடிகளில் தாண்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்து வருகிறது. யோ யோ சோதனையில் 17.1 என்பது தேர்ச்சி மதிப்பெண்ணாக இருந்து வருகிறது.



