இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஏனெனில் கடந்த ஆண்டு அவர் பார்ம் அவுட் காரணமாக சிறிது சறுக்கலை சந்தித்த வேளையில் இந்திய அணியின் நிர்வாகம் சார்பில் அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் காயத்தை காரணம் காட்டி அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்தார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் பி.சி.சி.ஐ மூலம் கிடைக்கப்போகும் ஜாக்பாட் :
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பிசிசிஐ நிர்வாகம் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் போன்ற வீரர்களை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதோடு அணியிலிருந்து சில காலம் வெளியேற்றியிருந்தது. ஆனால் தனது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டின் மூலம் மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு கம்பேக் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
அதிலும் குறிப்பாக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு முதுகெலும்பாக அவர் இருந்து வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் 48 ரன்கள் சராசரியுடன் 4 போட்டிகளில் 195 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.
அதில் இரண்டு முறை அரைசதத்தையும், அனைத்து போட்டிகளிலும் 40 ரன்களுக்கு மேல் அடித்தும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே தற்போது இந்திய அணி இறுதி போட்டி வரை தோல்வியை சந்திக்காமல் முன்னேறியுள்ளது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த சிறப்பான ஆட்டத்தினால் மகிழ்ச்சி அடைந்துள்ள இந்திய அணியின் நிர்வாகம் மீண்டும் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியாவது வழக்கம்.
இதையும் படிங்க : ரசிகர்களை மைதானத்திற்கு ஈர்க்கும் வகையில் அதிரடி ஆபரை அறிவித்த சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் – விவரம் இதோ
அந்த வகையில் இந்த ஆண்டு நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் ஊதிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஏ பிளஸ் கிரேடிலிருந்து ஏ கிரேடிற்கு நகர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



